`வேளாண்மை, பால் வளம், மீன் வளத்தில் தமிழகம் டாப் இடம்!' - தமிழக அரசு பெருமிதம்!
பல்வேறு வளர்ச்சித் திட்டங்களால் வேளாண்மை, பால் வளம், மீன் வளம் ஆகிய துறைகளில் தமிழகம் டாப் இடத்தில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
தமிழக அரசின் வேளாண் வளர்ச்சித் திட்டங்களால் கேழ்வரகு, கொய்யா உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் பிடித்திருக்கிறது.

மக்காச்சோளம், கரும்பு, புளி, மரவள்ளிக் கிழங்கு, மல்லிகை, எண்ணெய் வித்துகள் உற்பத்தி திறனில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாம் இடமும் பிடித்திருக்கிறது.
மேலும், வேர்க்கடலை, தென்னை உற்பத்தி திறனில் இந்தியாவில் மூன்றாம் இடமும் பிடித்திருக்கிறது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் முன்னெடுப்புகளால் முந்தைய ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளில் 2012-2013 முதல் 2020-2021 வரை சராசரியாக 1.36 சதவீதமாக இருந்த வேளாண் வளர்ச்சி, 2021 முதல் 2024 வரை சராசரியாக 5.66 சதவீதமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது.
மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாள்களில் வேளாண் சாகுபடி நிலப்பரப்பு அதிகரிக்கப்படும் என அறிவித்தார்கள்.
அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட திட்டங்களால் 2020-2021-ல் இருந்த பாசனம் பெற்ற நிலப்பரப்பு 36.07 லட்சம் எக்டரில் இருந்து, 2023-2024-ல் 38.33 லட்சம் எக்டராக அதிகரித்து உணவுப் பொருள் உற்பத்தியில் சாதனைகள் நிகழ்ந்தன.
தமிழ்நாட்டு மீனவர்கள் கடுமையாக உழைத்து கடல் நடுவே சென்று மீன்பிடித்து வந்து மக்களுக்கு வழங்குகிறார்கள்.
மீனவர் பெருங்குடி மக்களுக்கு உதவிடும் நோக்கில் திராவிட மாடல் அரசு ரூ.1,428 கோடி மதிப்பில் 72 மீன் இறங்கு தளங்களைப் புதிதாக ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் மீன்பிடித் தொழில் சிறக்க, தரங்கம்பாடி, இராமேஸ்வரம், திருவொற்றியூர் குப்பம் ஆகிய பகுதிகளில் மீன்பிடித் தொழில்கள் சிறக்கவும் முதலமைச்சரின் திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்கள்.

இப்படி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாண்மை, கால்நடைகள் வளர்ப்பு, மீனவர் நலன் என ஒவ்வொரு துறையையும், தாய் தன் குழந்தைகளைப் பேணி வளர்ப்பதைப் போல வளர்த்துள்ளதால், தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் சிறந்து, ஒட்டுமொத்தமான வளர்ச்சியில் இந்தியாவில் தமிழ்நாடு சிறந்த மாநிலம் எனும் பாராட்டுகளையும் புகழையும் குவித்து வருகிறது." என்று தெரிவித்துள்ளது.