Doctor Vikatan: மயங்கி விழுந்தவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்புவது சரியானதா?
Doctor Vikatan: ஏதேனும் காரணத்தினால் ஒருவர் மயக்கம் போட்டு விழுகிறார் என வைத்துக்கொள்வோம். உடனே அருகில் உள்ளவர்கள் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, மயக்கத்திலிருந்து எழுந்திருக்கச் செய்வார்கள். ஒருவேளை மயங்கி விழுந்த நபர் தனிமையில் இருக்கும்போது, தண்ணீர் தெளித்து எழுப்ப ஆளில்லாத பட்சத்தில் அந்த நபரின் மயக்கம் தானாகவே தெளியுமா?,
மயங்கி விழுந்த நபர் எவ்வளவு நேரம் மயக்கத்தில் இருப்பார், மயக்கமடைந்தவரின் முகத்தில் தண்ணீர் தெளிப்பது சரியான விஷயம்தானா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, குழந்தைகள் நலம் மற்றும் நீரிழிவு மருத்துவர் சஃபி
மயக்கம் என்பது சாதாரணமான அறிகுறி கிடையாது என்பதை முதலில் புரிந்துகொள்ளுங்கள். மயக்கம், தலைச்சுற்றல், சுயநினைவில்லாமல் போவது போன்ற அறிகுறிகள், சீரியஸான பிரச்னையின் அறிகுறிகளாக இருக்கலாம். அது நமக்கு வந்தாலும் சரி, மற்றவர்களிடம் பார்த்தாலும் சரி, சாதாரணமாகக் கடந்துபோகக்கூடிய விஷயமல்ல.
ஒரு நபருக்கு ரத்தச் சர்க்கரை அளவு குறைந்தால் மயங்கி விழலாம். அதாவது ஒருவருக்கு நீரிழிவு இருந்து, அதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டிருப்பவராக இருக்கலாம்.
சில நேரங்களில் அவருடைய ரத்தச் சர்க்கரை அளவுக்கும் அவர் எடுத்துக்கொள்ளும் மருந்துக்கும் சம்பந்தம் இல்லாமல் போய், ரத்தச் சர்க்கரை அளவு மிகவும் குறைந்து போகலாம். குறிப்பாக, அது 45 மில்லிகிராமைவிட குறைந்தால் மயக்கம் வந்து விழும் அளவுக்குப் போகலாம்.

அடுத்தது சிங்கோப் (Syncope) எனப்படும் பிரச்னையாலும் மயக்கம் வரலாம். இது ரத்த அழுத்தம் குறைவதால் ஏற்படுவது. வழக்கமாக மூளைக்குப் போகக்கூடிய ரத்த ஓட்டம் குறையும்போதோ, ஆக்ஸிஜன் அளவு குறையும்போதோ, மூளைக்குத் தகவல் போய், உடனே மயக்கம் வரலாம்.
அதேபோல சிலருக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகரிப்பதாலும் மயக்கம் வரலாம். அதாவது சராசரியைவிட மிக அதிகமாகும்போது மூளையிலுள்ள ரத்தக்குழாய்கள் வெடித்து, சட்டென தலைச்சுற்றல் ஏற்பட்டு மயங்கி விழக்கூடும்.
வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் திடீர் மயக்கம் வரக்கூடும். காதுக்குள் இருக்கும் பிரச்னை காரணமாக ஏற்படும் வெர்டிகோ பாதிப்பாலும், கழுத்து எலும்பு தேய்மானத்தாலும் கூட சிலருக்கு மயக்கம் வரலாம்.
மயங்கி விழுந்தவர்களுக்கு முகத்தில் தண்ணீர் தெளிப்பது என்பது காலங்காலமாகச் செய்யப்படுகிற ஒன்றுதான். மயக்கத்திலிருப்பவரின் முகத்தில் சில்லென்ற தண்ணீர் படும்போது, ட்ரைஜெமினல் நரம்பு (Trigeminal Nerve) உடனடியாக மூளைக்குத் தகவல் சொல்லி மூளைக்குத் தேவையான ரத்த ஓட்டத்தை அனுப்ப வாய்ப்பு உண்டு.

ஆனால், மயக்கம் வந்து விழுந்தவர்களின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்புவது என்பது முறையான முதலுதவி கிடையாது. மயங்கி விழுந்தவருக்கு என்ன பிரச்னை என்பதை முதலில் பார்க்க வேண்டும். மயங்கி விழுந்தவரின் கால் பகுதியை சற்று மேல் உயர்த்தி வைக்கலாம்.
மயங்கி விழுந்தவரை கவனிக்க ஆளில்லாத பட்சத்தில் அந்த நபர் தானாகவே மயக்கம் தெளிந்து எழுந்திருப்பாரா என்பதற்கு உறுதியாக பதிலளிக்க முடியாது. அப்படிப்பட்ட நிலையில் இறந்துபோனவர்கள் எத்தனையோ பேர் உண்டு, அது மிகவும் பரிதாபத்துக்குரிய விஷயம்தான்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.