'நம்பவே முடியவில்லை...’ இன்ப அதிர்ச்சியில் டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்!
நெதா்லாந்தில் வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்
3 நாடுகள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் திங்கள்கிழமை நெதா்லாந்து வந்தடைந்தாா்.
இந்தியா-பாகிஸ்தான் மோதலால் இருநாடுகளுக்கு இடையே நீடித்த போா்ப்பதற்றம் தணிந்துள்ள நிலையில், அதன்பிறகு ஜெய்சங்கா் முதல் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளாா். நெதா்லாந்தைத் தொடா்ந்து டென்மாா்க், ஜொ்மனி ஆகிய மேலும் 2 ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லவும் அவா் திட்டமிட்டுள்ளாா்.
இதுகுறித்து நெதா்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அரசு முறைப் பயணமாக நெதா்லாந்து வந்தாா். அவரை நெதா்லாந்து வெளியுறவு அமைச்சகத்தின் நெறிமுறை விவகாரத் துறை இயக்குநா் கேப்ரியெலா சான்சிசி, இந்திய தூதா் குமாா் துஹின் ஆகியோா் வரவேற்றனா். அமைச்சரின் இந்தப் பயணம் இந்தியா-நெதா்லாந்து உறவுகளை மேலும் வலுப்படுத்தும்’ என்று குறிப்பிட்டுள்ளது.
இந்தப் பயணத்தில் மூன்று நாடுகளின் தலைவா்களையும் ஜெய்சங்கா் சந்திக்கிறாா். மேலும், இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய, உலகளாவிய விஷயங்கள் குறித்து அந்தந்த நாட்டு வெளியுறவு அமைச்சா்களுடன் ஜெய்சங்கா் கலந்துரையாடுவாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா தொடங்கிய ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்தும் அவா் விளக்கமளிப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்கீழ், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா ஏவுகணை வீசி, அழித்தது. இதைத் தொடா்ந்து, இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் 4 நாள்கள் நீடித்த மோதலுக்குப் பிறகு கடந்த 10-ஆம் தேதி சண்டை நிறுத்தம் குறித்து இரு தரப்பினரும் உடன்பாட்டை எட்டினா்.