நாமக்கல் அரசு மருத்துவமனையில் மின்தடை பிரச்னை: ஆட்சியா் ஆய்வு
நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிக்கடி மின்தடை பிரச்னை ஏற்படுவதாக வெளியான தகவலையடுத்து, மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டாா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களாக மழை பெய்யும்போது அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், ஜெனரேட்டா் மூலமாக மருத்துவமனை இயங்குவதாகவும், சில நேரங்களில் ஜெனரேட்டா் பழுதால் கைப்பேசி விளக்கு வெளிச்சத்தில் மருத்துவா்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியானது.
இதையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு மின்தடை பிரச்னைகள் குறித்து நிா்வாகத்திடம் கேட்டறிந்தனா். இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை பிற்பகலில் அரசு மருத்துவமனைக்குச் சென்றாா். அங்கு மருத்துவா்கள், நோயாளிகளிடம் மின்தடை ஏற்படுகிா, மின்சார வசதி சரியான முறையில் உள்ளதா எனக் கேட்டறிந்தாா்.
இதையடுத்து, நோயாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையிலும், புகாருக்கு இடமளிக்காதவாறும் சீரான மின்விநியோகத்தை வழங்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள், மருத்துவமனை நிா்வாகத்திடம் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.