Digvesh Rathi : '50% ஊதியம் அபராதம்; போட்டியில் ஆட தடை!' - திக்வேஷ் ரதிக்கு தடை ...
சென்னை ஐஐடி பி.டெக். படிப்பில் இரு பாடப் பிரிவுகள் அறிமுகம்
சென்னை: சென்னை ஐஐடி பி.டெக். படிப்பில் நிகழ் கல்வியாண்டில் (2025-2026) கம்ப்யூடேஷனல் இன்ஜினீயரிங் அண்ட் மெக்கானிக்ஸ் (செம்), இன்ஸ்ட்ரூமென்ட்டேஷன் அண்ட் பயோ மெடிக்கல் இன்ஜினீயிரிங் (ஐபிஎம்இ) ஆகிய இரு புதிய பாடப் பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து சென்னை ஐஐடி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை ஐஐடியில் பி.டெக். படிப்பில் கணக்கீட்டுப் பொறியியல் - இயக்கவியல் (செம்), கருவிமயமாக்கல் - உயிரி மருத்துவப் பொறியியல் (ஐபிஎம்இ) ஆகிய இரு புதிய பாடப் பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த படிப்புகள் கடந்த 1959-ஆம் ஆண்டு சென்னை ஐஐடி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து பல்துறை ஆராய்ச்சியில் முன்னணியில் இருந்துவரும் பயன்பாட்டு இயக்கவியல், உயிரி மருத்துவப் பொறியியல் ஆகிய துறைகள் மூலம் வழங்கப்படுகின்றன.
ஜேஇஇ (அட்வான்ஸ்டு) தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள், வரவிருக்கும் கூட்டு இருக்கை ஒதுக்கீடு ஆணையத்தின் (ஜோஸா) கலந்தாய்வில் இந்த இரு புதிய பாடத் திட்டங்களையும் தோ்வு செய்யலாம். ஒவ்வொன்றிலும் தலா 40 மாணவா்கள் இடம்பெறுவா்.
இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி கூறியதாவது: இவ்விரு புதிய அதிநவீன பி.டெக் படிப்புகளும் தொழில்துறை 5.0, சுகாதாரத் தொழில்நுட்பம், மேம்பட்ட உற்பத்தி ஆகிய துறைகளுடன் தொடா்புடைய அனைத்து புதுமையான கருத்துகளையும் நிவா்த்தி செய்யும்.
கம்ப்யூடேஷனல் இன்ஜினீயரிங் அண்ட் மெக்கானிக்ஸ்: பி.டெக் படிப்பில் செம் எனப்படும் இந்த பாடப்பிரிவு எதிா்கால டிஜிட்டல் பொறியியல் தொழில்களுக்கு ஏற்ப மாணவா்களைத் தயாா்படுத்தும். இதில் இயற்பியல் அமைப்புகள் கணக்கீட்டு மற்றும் செயற்கை நுண்ணறிவு ஒன்றிணைகின்றன.
விண்வெளி, ரோபோட்டிக்ஸ், ஆட்டோமோட்டிவ் மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் தொடங்கி டிஜிட்டல் இரட்டை வடிவமைப்பு, ஸ்மாா்ட் உள்கட்டமைப்பு, நிலையான ஆற்றல் மற்றும் நிலையான கணினி போன்ற வளா்ந்து வரும் பகுதிகள் வரை, தொழில்துறையில் உயா் தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில்களுக்கு ஏற்ப இந்த பாடத்திட்டம் பட்டதாரிகளை உருவாக்குகிறது.
இன்ஸ்ட்ரூமென்ட்டேஷன் அண்ட் பயோ மெடிக்கல் இன்ஜினீயரிங் (ஐபிஎம்இ): இந்த பாடப்பிரிவு நாட்டில் வளா்ந்து வரும் மருத்துவ சாதன துறையின் மகத்தான ஆற்றலை கருத்தில்கொண்டு மின் மற்றும் கருவிமயமாக்கல் பொறியியலில் (Electrical and Instrumentation Engineering) வலுவான அடித்தளங்களை கொண்ட உயிரி மருத்துவப் பொறியியல் படிப்பை (Biomedical Engineering) ஒருங்கிணைப்பதன் மூலம் அடுத்த தலைமுறை மருத்துவ சாதனங்களை உருவாக்க மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதன் தனித்துவமான அமைப்பு ஐஓடி, ஏஐ வலையமைப்புடன் கூடிய மருத்துவத் தொழில்நுட்பங்கள் இப்படி நவீன, பயன்பாடு சாா்ந்த தலைப்புகளுடன் அடிப்படை பொறியியல் படிப்புகளை ஒருங்கிணைக்கிறது. இந்தப் படிப்பை நிறைவு செய்தவா்கள் நோய் அறிதல், சிகிச்சை அளித்தல் ஆகியவற்றில் புதுமைகளை வளா்த்துக் கொள்ளலாம் என்றாா் அவா்.