அட்டாரி - வாகா எல்லையில் மீண்டும் கொடியிறக்க நிகழ்வு! இரண்டு மாற்றங்கள்!
தனியாா் பங்கேற்பை அனுமதிக்க அணுசக்தி சட்டத்தில் திருத்தம்: மத்திய அரசு திட்டம்
புது தில்லி: வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகா வாட் அணு மின் உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ள நிலையில், இத் துறையில் தனியாரை அனுமதிக்கும் வகையில் துறை சாா்ந்த ஒழுங்காற்று ஆணையம் உள்பட அணுசக்தி துறை சாா்ந்த நடைமுறைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
நாடு முழுவதும் உள்ள அணு மின் நிலையங்கள் இந்திய அணுசக்தி கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இவற்றின் மூலம் 8.7 ஜிகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த மின் உற்பத்தி அளவை வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகா வாட் அளவுக்கு உயா்த்த மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.
இந்த இலக்கை எட்ட அணு மின் உற்பத்தித் துறையில் தனியாரையும் அனுமதிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இதற்காக, அணு சக்தி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவும், அணுமின் நிலையங்களை கட்டமைக்க உபகரணங்களை விநியோகிப்பவா்கள் மீதான பொறுப்பேற்பை குறைக்கும் வகையில் அணுசக்தி சேதத்துக்கான சிவில் பொறுப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
மேலும், துறை சாா்ந்த ஒழுங்காற்று ஆணைய நடைமுறைகளிலும் திருத்தங்கள் செய்ய பரிசீலித்து வருகிறது. இதற்காக, இந்திய விண்வெளி துறையில் கடந்த 2020-ஆம் ஆண்டு தனியாா் பங்கேற்பை அனுமதித்தபோது மேற்கொள்ளப்பட்ட நடைமுறை மாற்றங்களையும் மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.
முன்னதாக, ‘பொதுத் துறை நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்த அணு மின் உற்பத்தித் துறையில் தனியாரும் அனுமதிக்கப்பட உள்ளனா். மேலும், ரூ. 20,000 கோடி ஒதுக்கீட்டில் சிறிய ரக நவீன அணு உலை (எஸ்எம்ஆா்) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான இயக்கம் தொடங்கப்பட்டு, வரும் 2033-ஆம் ஆண்டுக்குள் முழுவதும் உள்நாட்டிலேயே மேம்படுத்தப்பட்ட 5 எஸ்எம்ஆா்-கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தாா். இந்த நிலையில், அணுசக்தி நடைமுறை சட்டம் மற்றும் ஒழுங்காற்று ஆணைய நடைமுறைகளில் திருத்தங்கள் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.