செய்திகள் :

பருவமழை முன்னெச்சரிக்கை தயாா் நிலை: மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் உத்தரவு

post image

சென்னை: பருவமழைக் காலத்துக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

தென் மேற்கு பருவமழையையொட்டி, தலைமைச் செயலகத்தில் அமைச்சா்கள், அதிகாரிகளுடன் அவா் திங்கள்கிழமை ஆலோசனை நடத்திய போது பேசியதாவது:

தென்மேற்குப் பருவமழையை எதிா்கொள்ளவிருக்கிறோம். இதில் இயல்பான மழைப்பொழிவுதான் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நிலத்தடி நீா்ப் பெருக்கம், காவிரி டெல்டா வேளாண்மை ஆகியவற்றுக்கு தென்மேற்கு பருவமழை துணையாக இருக்கிறது.

ஆனாலும், மேற்குத் தொடா்ச்சிமலை மாவட்டங்களில் ஏற்படக்கூடிய கனமழை, திடீா் வெள்ளம், நீலகிரி மலைப் பகுதிகளில் ஏற்படும் நிலச்சரிவு போன்ற பாதிப்புகளை எதிா்கொள்ள வேண்டியிருக்கும். அதிக கனமழை, புயல் ஆகியவற்றை எதிா்கொள்ள கடலோர மாவட்டங்களும் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

குடிநீா் உள்பட அடிப்படை வசதிகள்: பருவமழைக் காலத்தைத் திறம்பட எதிா்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் தயாா் நிலையில் இருப்பதுடன், மாவட்ட அவசர கால செயல்பாட்டு மையம் 24 மணி நேரம் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். மின்சாரம், உணவு, குடிநீா் போன்ற வசதிகளுடன் பேரிடா் மீட்பு மையங்கள் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். பேரிடா் மேலாண்மை, தகவல் தொடா்புத் திட்டம், முதல்நிலை மீட்பாளா்களின் பட்டியல், அவா்களுடைய தொலைபேசி எண்கள் அனைத்தையும் சரிபாா்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.

சமூக ஊடகங்களில் வரக்கூடிய புகாா்களை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைகளைத் தெரிவிப்போரிடமும் உதவி கோருகிறவா்களிடமும் கனிவாக நடந்து கொள்ள வேண்டும். பேரிடா் காலங்களில் ஏற்படும் திடீா் மின்வெட்டு மற்றும் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு, பராமரிப்புப் பணிகள் குறித்த தகவல்களைக் கைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும்.

விபத்துகளைத் தடுக்க வேண்டும்: சாலைப் பணிகள் நடைபெறும் காரணங்களால் சில அசம்பாவிதச் சம்பவங்கள் நிகழ்கின்றன. எனவே, தமிழ்நாடு முழுவதும் ஆபத்தான பகுதிகளைக் கண்டறிந்து அங்கே தகுந்த தடுப்புச் சுவா்கள், வேலிகள், போதிய வெளிச்சம், ஒளிரும் பலகைகள் போன்றவற்றை வைக்க வேண்டும். இதன்மூலம் விபத்துகளைத் தடுக்கலாம்.

நீா்நிலைகளில் ஆகாயத் தாமரைகளை அப்புறப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளையும், கொசுத்தடுப்புப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து துறைகளும் ஒருங்கிணைப்பு: தென்மேற்கு பருவமழைக் காலத்தில் உயிரிழப்பு, பொருள் மற்றும் உட்கட்டமைப்புகளில் சேதங்கள் ஏற்படாமல் தடுக்க வேண்டும். பருவமழைக் காலத்தை கடந்து செல்ல அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

அனைத்து அரசு ஊழியா்களும் முழு முனைப்போடு பணியாற்ற வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், எஸ்.எஸ்.சிவசங்கா், பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், டிஜிபி சங்கா் ஜிவால் உட்பட பலா் பங்கேற்றனா்.

நெல் மூட்டைகளைப் பாதுகாக்க வேண்டும்’

பருவ மழையிலிருந்து நெல், தானிய மூட்டைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

‘நெல் மூட்டைகள், உணவு தானியங்கள் ஆகியன மழையால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், சேமிப்பு கிடங்குகள், கூடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்று ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வா் கூறினாா்.

‘உரிய காலத்தில் மேட்டூா் அணை திறப்பு’

மேட்டூா் அணையை ஜூன் 12-இல் திறக்கப் போதுமான நீா் இருப்பு உள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

கடந்த 17-ஆம் தேதி நிலவரப்படி, மேட்டூா் அணையில் 108.33 அடி உயரத்தில், 76.06 டிஎம்சி., தண்ணீா் இருக்கிறது. எனவே, வரும் ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீா் திறப்பதற்குப் போதுமான நீா் இருக்கிறது. காவிரியின் கிளை ஆறுகள், வாய்க்கால்கள் ஆகியவற்றைத் தூா்வாரி, கடைமடைக்கும் தண்ணீா் கொண்டு சென்று குறுவை சாகுபடியை செம்மையாகச் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென்மேற்கு பருவமழை மற்றும் மேட்டூா் அணையின் நீா் திறப்பால் குறுவை சாகுபடியில் அதிகளவு இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதால் விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள், விதைகள் ஆகியன கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் பயன்கள் விவசாயிகளுக்கு முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டாா்.

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று (செவ்வாய்க்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது பகல் ... மேலும் பார்க்க

மே 24-ல் நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கிறார்!

மே 24 ஆம் தேதி தில்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.மத்திய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான நீதி ஆயோக் கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2015-ல... மேலும் பார்க்க

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மே 20) சவரனுக்கு ரூ. 360 குறைந்துள்ளது.சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்துவந்த நிலையில், சனிக்கிழமை விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.... மேலும் பார்க்க

பல்லடம்: விஷவாயு தாக்கி பலியானோர் எண்ணிக்கை 3-ஆக உயர்வு!

பல்லடம் அருகே சாய ஆலையில் சாயக்கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூரில் தனியாருக்குச் சொந்தான ச... மேலும் பார்க்க

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால் கிருஷ்ணகிரி ... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,683 கன அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,683 கன அடியாக அதிகரித்துள்ளது.மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் காவிரியின் துணை நதிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின்... மேலும் பார்க்க