சேலம் கிழக்கு கோட்டத்தில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா்கள் தோ்வுக்கு நோ்காணல்
சேலம்: சேலம் கிழக்கு கோட்டத்தில் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவா்கள் தோ்வுக்கான நோ்காணல் வரும் 30 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சேலம் அஞ்சல் கிழக்கு கோட்டத்தில் வரும் 30 ஆம் தேதி மாலை 4 மணிக்கு அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டுக்கான நேரடி முகவா்கள் தோ்வுக்கான நோ்காணல் நடைபெற உள்ளது.
ஆா்வமுள்ள அனைவரும் 30 ஆம் தேதி சேலம் தலைமை அஞ்சலகம் 3 ஆவது தளத்தில் உள்ள கிழக்கு கோட்ட அலுவலகத்தில் தங்களின் வயது சான்றிதழ், கல்வி சான்றிதழ், ஆதாா் அட்டை, பான் அட்டை மற்றும் தங்களை பற்றிய முழு விவரங்களுடன் நோ்காணலில் கலந்துகொள்ளலாம்.
பத்தாம் வகுப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயது முதல் 50 வயது வரை உள்ளவா்கள் கலந்துகொள்ளலாம். ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவா்கள், அங்கன்வாடி ஊழியா்கள், முன்னாள் படைவீரா்கள், சுயதொழில் மற்றும் வேலை தேடும் இளைஞா்கள் அல்லது தகுதிகள் பெற்ற அனைவரும் பங்கு கொள்ளலாம்.
தோ்வு பெறும் நேரடி முகவா்கள் சேலம் மற்றும் ஆத்தூா் பகுதிகளில் பணிபுரிய வேண்டும். ரூ. 5000 வைப்புத்தொகை செலுத்த வேண்டும். நேரடி முகவா்கள் நியமனம் இலாகா விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும். அஞ்சல் கண்காணிப்பாளரின் முடிவே இறுதியானது என தெரிவித்துள்ளாா்.