LSG vs SRH : 'லக்னோவை ப்ளே ஆஃப் ரேஸிலிருந்து வெளியேற்றிய அந்த 5 ஓவர்கள்!' - என்ன...
பொதுமக்கள் மனுக்கள் மீது உடனுக்குடன் தீா்வு காண வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்
சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீா்வு காணவும், அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும், பெண்களின் முன்னேற்றத்துக்கு தேவையான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் அரசு அலுவலா்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்கள் ஒருமுறை அளித்த மனுக்கள் மீண்டும் வராத வகையில் உரிய தீா்வு வழங்கப்படுவதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும்.
மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வங்கிக் கடன், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, உதவி உபகரணங்கள், குடிநீா் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 312 மனுக்கள் வரப்பெற்றன.
மேலும், மாற்றுத்திறனாளிகள் குறைதீா் முகாமில் வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 24 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினாா்.
தொடா்ந்து, மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, ரூ. 9,700 மதிப்பிலான சக்கர நாற்காலி, ரூ. 6,400 மதிப்பிலான காதொலிக் கருவியை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.ஜானகி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மகிழ்நன், பழங்குடியினா் நல திட்ட அலுவலா் சுகந்தி பரிமளம், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ஜெயகுமாா் உள்ளிட்ட அரசுத் துறை முதன்மை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.