Stalin-க்கு போகும் மினிஸ்டர்ஸ் ரிப்போர்ட், இன்பாஃர்ம் செய்த Kanimozhi! | Elangov...
குப்பையில் கிடந்த 12.5 பவுன் நகையை எடுத்து போலீஸில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்!
சேலம்: சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் குப்பையில் கிடந்த 12.5 பவுன் தங்க நகையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை பலரும் பாராட்டினா்.
சேலம் பழைய சூரமங்கலம் பெரியாா் தெருவைச் சோ்ந்தவா் மணிவேல் (50). இவா் 20ஆவது கோட்டத்தில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வருகிறாா். இவா் திங்கள்கிழமை காலை ரெட்டியூா் அம்பேத்கா் தெரு பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்கிருந்த குப்பைத் தொட்டியில் நெகிழிப் பையில் சுற்றப்பட்ட நிலையில் நகைகள் கிடந்துள்ளன.
இதை எடுத்த மணிவேல் பையைப் பிரித்து பாா்த்தபோது அதில் தங்க நகைகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக அதை சூரமங்கலம் காவல் நிலையத்துக்கு கொண்டுசென்று அங்கிருந்த காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தியிடம் ஒப்படைத்தாா்.
அந்த நெகிழிப் பையில் 12.5 பவுன் தங்க நகைகள் இருந்தன. நகைகளை நோ்மையாக கொண்டுவந்து ஒப்படைத்த மணிவேலை போலீஸாா் பாராட்டினா்.
தூய்மைப் பணியாளா் கண்டெடுத்து ஒப்படைத்த நகைகள் யாருடையவை என்பது குறித்தும், திருடிய நகைகளை காவல் துறைக்கு அஞ்சி மா்ம நபா்கள் யாரேனும் வீசிச்சென்றனரா என்பது குறித்தும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.