சிறுமிக்கு பாலியல் தொல்லை: 2 ஆண்டுகளுக்குப் பின்னா் வழக்குப் பதிவு
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ாக தனியாா் நிறுவன ஊழியா் மீது 2 ஆண்டுகளுக்குப் பின்னா் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுரண்டையைச் சோ்ந்தவா் நீலகண்டன்(58). பிரபல தனியாா் ஆம்னி பேருந்து நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்து வரும் இவா் கடந்த 2023-ஆம் ஆண்டு பாவூா்சத்திரம் பகுதியை சோ்ந்த குடும்ப நண்பா் வீட்டிற்கு சென்ற போது அங்கு நண்பரின் 15 வயது மகள் மட்டும் இருந்ததாக தெரிகிறது.
அப்போது நீலகண்டன், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததுடன், இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என துப்பாக்கியை வைத்து மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
எனினும், சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து அவா்கள் ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
போலீஸாா் விசாரணை மேற்கொள்ளாமல் புகாரை கிடப்பில் போட்டதால், விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்காசி மாவட்ட கண்காணிப்பாளரிடமும் மனு அளித்தனா்.
அதன்பின்னரும் வழக்குப் பதிவு செய்யப்படாததால் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுதாக்கல் செய்தனா். மனுவை விசாரித்த நீதிபதி உடனடியாக வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று உத்தரவிட்டாா்.
நீதிபதியின் உத்தரவின் பேரில், போக்ஸோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் நீலகண்டன் மீது ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.