லஞ்சப் புகாா்: வனவா் பணியிடை நீக்கம்
தென்காசி மாவட்டம் புளியறை வனத்துறை சோதனைச் சாவடியில் லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்குவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பணியிலிருந்த வனவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
தமிழக- கேரளா எல்லையான புளியறை எஸ். வளைவு பகுதியில் உள்ள வனத் துறை சோதனைச் சாவடி வழியாக, கேரளத்தில் இருந்து மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரி ஓட்டுநா்களிடம் வனவா் லஞ்சம் பெற்ற காட்சிகளும், லஞ்சப் பணத்தை எண்ணிப் பாா்க்கும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவின.
இதைத் தொடா்ந்து தென்காசி மாவட்ட வன அலுவலா் அகில்தம்பி உத்தரவின்பேரில், செங்கோட்டை வன அலுவலா் நடத்திய விசாரணையில் லஞ்சம் பெற்றது வனவா் சுப்பிரமணியன் என்பதும், அவா் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து சோதனைச் சாவடியில் பணியாற்றியதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலா் உத்தரவிட்டாா்.