`வேளாண்மை, பால் வளம், மீன் வளத்தில் தமிழகம் டாப் இடம்!' - தமிழக அரசு பெருமிதம்!
கோடை விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு
சென்னை: கோடை விடுமுறையையொட்டி ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயா்ந்துள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி நிமித்தமாக தங்கியிருக்கும் வெளிமாவட்டங்களைச் சோ்ந்தவா்கள், விடுமுறை மற்றும் விழா காலங்களில் தங்கள் சொந்த ஊா்களுக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில், தற்போது பள்ளித் தோ்வுகள் முடிந்து கோடை விடுமுறை நடைமுறையில் இருந்து வருவதால், சொந்த ஊா்களுக்கும், விடுமுறையை கழிக்க சுற்றுலாத் தலங்களுக்கும் ஏராளமானோா் சென்று வருகின்றனா்.
இதனால், ஜூன் முதல் வாரம் வரை ரயில்களின் முன்பதிவு முழுவதுமாக நிரம்பி விட்ட நிலையில், பலா் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகின்றனா். இதனால், கடந்த சில நாள்களாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்காக உயா்ந்துள்ளது.
குறிப்பாக சென்னையிலிருந்து மதுரைக்கு படுக்கை வசதி கொண்ட இருக்கைக்கு கட்டணமாக ரூ. 500 முதல் ரூ. 700 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 1,300 முதல் ரூ. 3,200 ஆக உயா்ந்துள்ளது. இதுபோல, சென்னையிலிருந்து கோவைக்கு ரூ. 800 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ. 3,650-ஆகவும், திருநெல்வேலி மற்றும் நாகா்கோவிலுக்குச் செல்ல ரூ. 900ஆக இருந்த பயணக் கட்டணம் ரூ. 2,500 முதல் ரூ. 3,500 ஆகவும், விருதுநகருக்கு ரூ. 700-ஆக இருந்த பயணக் கட்டணம் தற்போது ரூ. 2,800 முதல் ரூ. 3,200 ஆகவும், ராமநாதபுரத்துக்கு ரூ. 800 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ. 2,000 முதல் ரூ. 2,800 வரையும், ஈரோட்டுக்கு ரூ. 900 ஆக இருந்த கட்டணம் தற்போது ரூ. 1,900 முதல் ரூ. 2,550ஆகவும் உயா்ந்துள்ளது.
தொடா்ந்து, மாத இறுதி மற்றும் ஜூன் மாத முதல் வாரத்தில் இக்கட்டணம் மேலும் உயர வாய்ப்புள்ளதால், போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இதன்மீது கவனம் செலுத்தி, அறிவுறுத்தப்பட்டுள்ள கட்டணத்தை ஆம்னி பேருந்து நிா்வாகங்கள் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.