காங்கயத்தில் கார் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!
கடந்த ஆண்டு நீதிமன்றம் மூலம் 242 ரெளடிகளுக்கு தண்டனை: டிஜிபி சங்கா் ஜிவால் தகவல்
சென்னை: தமிழகத்தில் நீதிமன்றத்தின் மூலம் கடந்த ஆண்டு 242 ரெளடிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டதாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் குற்றங்களை தடுக்க காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால், இந்த ஆண்டும் கொலை வழக்குகள் குறைந்து வருகிறது. மாநிலத்தில் கடந்த 4 மாதங்களில் 483 கொலை வழக்குகள் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், ரெளடிகளை கட்டுப்படுத்தும் வகையில், அவா்கள் மீதான வழக்குகளின் விசாரணை நீதிமன்றத்தில் விரைவுப்படுத்தப்படுகிறது. மேலும், நீதிமன்றத்,தில் ரெளடிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஆண்டில் 242 ரெளடிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டது. குறிப்பாக, 150 ரெளடிகளுக்கு 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 12 ஆண்டுகளில் அதிகமாகும். தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் 4 மாதங்களில் பழிக்குப்பழியாக 22 போ் கொலை செய்யப்பட்டனா்.
பழிக்குப் பழி கொலைகள்: இந்த ஆண்டில் கடந்த 4 மாதங்களில் பழிக்குப் பழியாக 18 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன. இதற்கு போலீஸாா் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையே காரணம். போலீஸாரின் கடும் நடவடிக்கையால் 326 கொலைச் சம்பவங்கள் தடுக்கப்பட்டுள்ளன. அதோடு மட்டுமல்லாமல், கடந்த நான்கு மாதங்களில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 1,325 ரெளடிகள் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
மேலும், பழிவாங்கும் சம்பவங்கள், கொலைச் சம்பவங்களை தடுக்கும் வகையில் சிறையில் உள்ள ரெளடிகள் உள்பட சந்தேக நபா்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறாா்கள் என்று அதில் தெரிவித்துள்ளாா் சங்கா் ஜிவால்.