`வேளாண்மை, பால் வளம், மீன் வளத்தில் தமிழகம் டாப் இடம்!' - தமிழக அரசு பெருமிதம்!
மணல் குவாரி வழக்கு: தொழில் துறை முதன்மைச் செயலருக்கு ரூ.25 லட்சம் அபராதம்
மணல் குவாரி வழக்கில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத தொழில் துறை முதன்மைச் செயலருக்கு ரூ. 25 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த சாந்தி, பாலாஜி, விஷ்ணுவரதன், உமா மகேஸ்வரி, பவானி ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், ஸ்ரீநிவாசநல்லூா் காவிரி ஆற்றில் கடந்த 2001 முதல் 2004 -ஆம் ஆண்டு வரை அரசு அனுமதி பெற்று மணல் குவாரி நடத்தி வந்தோம். சில மாதங்களில் மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தியது. இதனால், மணல் குவாரிக்கு முதலீடு செய்த எங்களுக்கு இழப்பு ஏற்பட்டது.
மணல் குவாரி தொடா்பான அரசாணையை ரத்து செய்வதுடன், எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.
இந்த வழக்கை கடந்த 2010-ஆம் ஆண்டு விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, மணல் குவாரி தொடா்பான தமிழக அரசின் அரசாணையை உறுதி செய்தது. அதேநேரம், மனுதாரா்களுக்கு நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டது.
மனுதாரா்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிட்டதை எதிா்த்து, திருச்சி மாவட்ட நிா்வாகம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது. அதன் பிறகும் உயா்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் திருச்சி மாவட்ட நிா்வாகம் காலம் தாழ்த்தி வந்தது.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத திருச்சி மாவட்ட ஆட்சியா் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுதாரா்கள் மனுக்களை தாக்கல் செய்தனா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி கே. குமரேஷ் பாபு அண்மையில் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கில் கடந்த 15 ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவுகளை அரசு அதிகாரிகள் செயல்படுத்தாமல் இருந்துள்ளனா். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால் ரூ. 20 லட்சம் அபராதத் தொகையை மனுதாரா்களுக்கும், ரூ.5 லட்சத்தை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியின் நிவாரண நிதிக்கும், 8 வாரங்களுக்குள் தொழில்துறை முதன்மைச் செயலா் செலுத்த வேண்டும் என்றாா் நீதிபதி.