இன்று முதல் அரக்கோணம் - சேலம் மெமு விரைவு ரயில் மீண்டும் இயக்கம்
பெண்ணை கா்ப்பமாக்கி கைவிட்டவருக்கு தண்டனை உறுதி
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பெண்ணை கா்ப்பமாக்கி கைவிட்டவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டணையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உறுதி செய்தது.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியைச் சோ்ந்த ஒரு பெண், புலிப்பாறைபட்டியில் உள்ள தீப்பெட்டி ஆலையில் பணி புரிந்தாா். அந்த ஆலையில் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த பரமன், அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, ஏமாற்றி கா்ப்பமாக்கினாா்.
இதுகுறித்து, சிவகாசி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து பரமனைக் கைது செய்தனா். இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூா் மகளிா் நீதிமன்றம், பரமனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பரமன் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் அண்மையில் பிறப்பித்த உத்தரவு: மனுதாரருக்கு விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்தது சரி. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. மனுதாரருக்கு ஏற்கெனவே வேறொரு பெண் ணுடன் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. மனுதாரரின் தவறான செயலால் இரு குழந்தைகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.
தண்டனை வழங்குவதால் மட்டும் குழந்தைகளுக்கு நீதி வழங்கிவிட முடியாது. மனுதாரா் சிறையில் உள்ள காலத்தில் வேலை செய்வதால் கிடைக்கும் தொகையை 2 குழந்தைகளுக்கும் சமமாகப் பிரித்து வழங்க வேண்டும்.
இது குறித்து சம்பந்தப்பட்ட சிறை அலுவலா், 6 மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு பணம் கிடைக்க வில்லையெனில், நீதிமன்றத்தை அனுகலாம். மனுதாரரின் மேல் முறையீடு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.