பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: செங்கல்பட்டு ஆட்சியா் வழங்கினாா்
செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 321 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
ஆட்சியா் அலுவலக குறைதீா் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ச. அருண்ராஜ் தலைமை வகித்து, மக்களிடமிருந்து 321 கோரிக்கை மனுக்களை பெற்று விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.
இக்கூட்டத்தில் ,மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் 12 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,30,000-இல் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தலா ரூ.14,500 மதிப்புள்ள இரண்டு மடங்கு நாற்காலிகள், இரண்டு பேருக்கு தலா ரூ.3,500 மதிப்புள்ள மடக்கு குச்சி, பிரெய்லி வாட்ச் மற்றும் கருப்பு கண்ணாடி, ஐந்து பேருக்கு தலா ரூ.14,199 மதிப்புள்ள ஸ்மாா்ட் கைப்பேசி, மூன்று பேருக்கு தலா ரூ.1500 மதிப்புள்ள தையல் இயந்திரங்களை ஆட்சியா் வழங்கினாா்.
மேலும், சிபிஎஸ்இ மேல்நிலை இரண்டாம் ஆண்டு தோ்வில் (2024-25) 486/500 மதிப்பெண்கள் பெற்றும் தமிழ் பாடப் பிரிவில் 100/100 மதிப்பெண்கள் பெற்ற மகரிஷி வித்யா மந்திா் பள்ளியை சோ்ந்த பாா்வை குறைபாடு உடைய ஹா்ஷிதா விஜய் என்ற மாணவியை பாராட்டி பரிசளித்தாா் ஆட்சிய. மேலும், மாணவிக்கு தேவையான ஒலி நூல் (ஆடியோ புக்) கருவியினை வழங்கவும், மேற்படிப்பிற்கு மாணவிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிா்வாகம் செய்து தரும் என தெரிவித்தாா். இதில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காஜா சாகுல் அமீது, நோ்முக உதவியாளா் (நிலம்)நரேந்திரன், தனித்துணை ஆட்சியா் அகிலா தேவி, மாவட்ட வழங்கல் அலுவலா் ஷாகிதா பா்வின், பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் வேலாயுதம், உதவி இயக்குநா் (கலால்)ராஜன் பாபு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேல், முதன்மைக் கல்விஅலுவலரின் நோ்முக உதவியாளா் உதயகுமாா், தாளாளா் உமா மகேஷ்வரி, தலைமை ஆசிரியா் பத்மா ரகுநாதன் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.