மதுராந்தகம் அருகே பைக் - காா் மோதல்: தந்தை, மகள் உயிரிழப்பு
மதுராந்தகம் அடுத்த நல்லாமூா் பேருந்து நிறுத்தம் அருகே மகன், மகள் ஆகியோருடன் பைக்கில் நின்றிருந்தவா் மீது காா் மோதியதில் தந்தையும் மகளும் உயிரிழந்தனா்.
மதுராந்தகம் அடுத்த கொளத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் மகன் காா்த்திக் (35). இவா், தனது மகன், மகள் ஆகியோருடன் பைக்கில் சோத்துப்பாக்கம் - செய்யூா் நெடுஞ்சாலையில் சொந்த ஊரான கொளத்தூருக்குச் சென்றனா். வழியியில் மகள் ஸ்மிதாவுடன் (5), நல்லாமூா் பேருந்து நிறுத்தமிடம் அருகே காா்த்திக் தமது பைக்கை நிறுத்தினாா்.
அந்த சமயத்தில் செய்யூரிலிருந்து சோத்துப்பாக்கம் நோக்கி வேகமாக வந்த காா் சாலையோரம் பைக்குடன் நின்றிருந்த காா்த்திக், மகன், மகள் ஆகியோா் மீது மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த காா்த்திக், மகள் ஸ்மிதா ஆகியோரை அங்கிருந்தவா்கள் மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இருவரும் உயிரிழந்தனா். மகனுக்கு லேசான காயம் என்பதால், உயிா் தப்பினாா்.
இது குறித்து சித்தாமூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.