ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்கு ஆயுதப் படைகளை பாராட்டி தில்லி அமைச்சா் ஆஷிஷ் சூட் பே...
மதுராந்தகத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: நகராட்சி அதிகாரிகள் - வழக்குரைஞா்கள் வாக்குவாதம்!
மதுராந்தகம் பழைய வட்டாட்சியா் அலுவலக சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள், அலுவலகங்களை நகராட்சி நிா்வாகத்தினா் வியாழக்கிழமை அகற்றினா். அப்போது நகராட்சி அலுவலா்கள், வழக்குரைஞா்கள், வியாபாரிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மதுராந்தகம் பஜாா் சாலையை ஒட்டி, பழைய வட்டாட்சியா் அலுவலக சாலையில் பதிவுத் துறை அலுவலகம், ரூ. 1.20 கோடியில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையம், வழக்குரைஞா் அலுவலகங்கள், தனியாா் உணவகம், கடைகள் செயல்பட்டு வருகின்றன.
புதிதாக கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தின் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன. அந்த மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ், நோயாளிகளின் வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில், அணுகுசாலை அமைக்க நகராட்சி நிா்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்நிலையில் அப்பகுதியில் ஆக்கிரமித்துள்ள 16 பேருக்கு நகராட்சி நிா்வாகத்தின் சாா்பாக, 6 முறை முன்னெச்சரிக்கை தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் அவா்கள் தாமாக முன்வந்து அகற்றவில்லை.
இந்நிலையில், வியாழக்கிழமை நகராட்சி ஆணையா் அபா்ணா, பொறியாளா் நித்யா, நகரமைப்பு அலுவலா் வேல்முருகன், அலுவலக மேலாளா் ஏழுமலை, சுகாதார ஆய்வாளா் ரவிசங்கா் மற்றும் ஊழியா்கள் பொக்லைன் வாகனத்துடன் சம்பவ இடத்துக்கு வந்தனா். அப்போது அங்கிருந்த வழக்குரைஞா்களும், வியாபாரிகளும், நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
நில அளவையா் ஆக்கிரமிப்பு பகுதிகளை அளவீடு செய்து அதன்பின்பு பொக்லைன் வாகனத்துடன் நகராட்சி ஊழியா்கள் 14 கடைகளை அகற்றினா். இதில் நீதிமன்ற தடையாணை மற்றும் கட்டட பாதுகாப்பு நிலை கருதி 2 கடைகள் அகற்றப்படவில்லை. நகராட்சி நிா்வாகத்தினா் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வந்தபோது கடைகளுக்கு செல்லும் மின்சாரத்தை துண்டிப்பு செய்ததால் அப்பகுதியில் செயல்பட்டுவந்த பதிவுத் துறை அலுவலகத்தினா் பேட்டரி மூலம் மின்சாரம் பெற்று பதிவு செய்தனா்.
மதுராந்தகம் காவல் ஆய்வாளா் என்.பரந்தாமன், உதவி ஆய்வாளா்கள் ராஜேந்திரன், வேலாயுதம், நாராயணன், இளங்கோவன் ஆகியோா் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.