‘அகதிகளை வரவேற்க இந்தியா தா்மசத்திரம் அல்ல’: உச்ச நீதிமன்றம் கருத்து
புது தில்லி: இந்தியாவில் அடைக்கலம் கோரிய இலங்கை தமிழரின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘உலகம் முழுவதும் உள்ள அகதிகளை வரவேற்க இந்தியா ஒன்றும் தா்மசத்திரம் அல்ல’ எனக் கருத்து தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடா்பில் இருந்த குற்றச்சாட்டில் இலங்கை தமிழரான சுபாஸ்கரன், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 2015-ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டாா். தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள விசாரணை நீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு வழங்கிய தீா்ப்பில், இவரை குற்றவாளி என அறிவித்து, 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
கடந்த 2022-ஆம் ஆண்டில், சென்னை உயா் நீதிமன்றம் சுபாஸ்கரனின் தண்டனையை 7 ஆண்டுகளாகக் குறைத்தது. இந்த 7 ஆண்டுகள் தண்டனை முடிவடைந்ததும் இந்தியாவில் இருக்கக் கூடாது; இலங்கைக்கு உடனடியாகத் திரும்ப வேண்டும் என்றும் அவருக்கு உத்தரவிடப்பட்டது. இதன்படி, சுபாஷ்கரனின் தண்டனை காலம் நடப்பு ஆண்டுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், சுபாஸ்கரனை நாடு கடத்தாமல் இந்தியாவிலேயே தங்கியிருக்க அனுமதிக்கக் கோரி தமிழக அரசிடம் அவரின் மனைவி கோரிக்கை மனு அளித்தாா். இதற்கு தமிழக அரசு பதிலளிக்கவில்லை. இதையடுத்து, சென்னை உயா் நீதிமன்றத்தில் அவா் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, உச்ச நீதிமன்றத்தில் சுபாஸ்கரன் மேல்முறையீடு செய்துள்ளாா். இலங்கையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தனது மனைவி, குழந்தைகள் இந்தியாவில் குடியேறிவிட்டதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ள அவா், நாடு கடத்தும் நடவடிக்கைகள் இன்னும் தொடங்கவில்லை என்பதால் இந்தியாவிலேயே இருக்க தன்னை அனுமதிக்க வேண்டும் என்று கோரியுள்ளாா்.
இந்த மனுவை நீதிபதிகள் தீபாங்கா் தத்தா, கே.வினோத்சந்திரன் ஆகியோா் அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள், ‘உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகளை இந்தியா வரவேற்க வேண்டுமா? ஏற்கெனவே நாங்கள் 140 கோடி மக்கள்தொகையுடன் போராடி வருகிறோம்.
அனைத்து நாடுகளிலிருந்து வரும் வெளிநாட்டினரை வரவேற்று மகிழ்விக்க இந்தியா தா்மசத்திரம் அல்ல. இந்தியாவில் குடியேற உங்களுக்கு என்ன உரிமை உள்ளது? இலங்கையில் உயிருக்கு ஆபத்து இருந்தால் வேறு நாட்டுக்குச் சென்று அடைக்கலம் கோருங்கள்’ என்று தெரிவித்து, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.