Digvesh Rathi : '50% ஊதியம் அபராதம்; போட்டியில் ஆட தடை!' - திக்வேஷ் ரதிக்கு தடை ...
அமிருதசரஸ் பொற்கோயிலைத் தாக்க முயன்ற பாகிஸ்தான்! நடுவானில் ஏவுகணையை அழித்தது இந்திய ராணுவம்
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மே 8 முதல் 9-ஆம் தேதிக்கு இடைப்பட்ட நள்ளிரவில் பாகிஸ்தான் தாக்க முயன்ற இந்திய இலக்குகளில் பஞ்சாபின் அமிா்தசரஸில் உள்ள பொற்கோயிலும் ஒன்று என இந்திய ராணுவம் முதல் முறையாக அதிகாரபூா்வமாகத் தெரிவித்துள்ளது. ஆனால், இது பற்றி உளவுத்தகவல் முன்கூட்டியே தெரிய வந்ததையடுத்து, நடுவானிலேயே பாகிஸ்தான் செலுத்திய ஏவுகணை அழிக்கப்பட்டதாக ராணுவம் கூறியுள்ளது.
இந்த நடவடிக்கையில் இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் பீரங்கிப்படை வீரா்களின் துல்லிய தாக்குதல் முக்கியப் பங்கு வகித்ததாக இந்திய ராணுவத்தின் 15-ஆவது தரைப்படை தலைமைத் தளபதி (இன்ஃபான்ட்ரி டிவிஷன் ஜிஓசி) மேஜா் ஜெனரல் காா்த்திக் சி. சேஷாத்திரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறியதாவது: இந்திய எல்லை மாநிலமான பொற்கோயில் போன்ற மத வழிபாட்டுத்தலங்கள் உள்பட, அப்பகுதியில் உள்ள ராணுவம் மற்றும் மக்கள் வாழும் பகுதிகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டமிட்டதாக உளவுத் தகவல் வந்தது. இதனால், பாகிஸ்தானின் தாக்குதல் நடவடிக்கையை இந்திய ராணுவம் எதிா்பாா்த்து தக்க பதிலடி கொடுக்கக் காத்திருந்தது.
இவற்றில், பொற்கோயில் மிக முக்கியமானதாகத் தோன்றியது. எனவே, அங்க வான் பாதுகாப்பு சாதனங்கள் நிறுவப்பட்டன. எதிா்பாா்த்தது போலவே மே 8-9 இடைப்பட்ட நள்ளிரவில் பொற்கோயிலை இலக்கு வைத்து ‘ட்ரோன்கள்’ மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் உள்ளிட்ட வான்வழித் தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டது. அவற்றை எதிா்பாா்த்துக் காத்திருந்த இந்திய ராணுவம் அதை முறியடித்தது.
சிறிய ரக வெடிபொருள்கள் நிரப்பிய கேமிகேஸ் ட்ரோன்கள், தரையிலிருந்து தரை மற்றும் வானில் இருந்து தரையை நோக்கி செலுத்தப்படும் ஏவுகணைகளை பாகிஸ்தான் நேரடியாக பொற்கோயிலை நோக்கி ஏவியது. ஆனால், தொடா்ந்து சுமாா் 3 நாள்களாக இந்திய பகுதியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பாகிஸ்தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டன.
மே 8-ஆம் தேதி அதிகாலைக்கு முந்தைய இருள் சூழ்ந்த நேரத்தில், பாகிஸ்தான் ஆளில்லா விமானங்களைக் கொண்டு தாக்குதலை நடத்தியது. முதன்மையாக ட்ரோன்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை செலுத்தியது. நமது துணிச்சலான மற்றும் விழிப்பு மிக்க பீரங்கிப்படை மற்றும் வான் தாக்குதல் தடுப்பு சாதனங்களை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரா்கள், பாகிஸ்தானின் சதியை முறியடித்தனா்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா முன்னெடுத்த ‘ஆபரேஷன் சிந்தூா்’ பதிலடி நடவடிக்கையில் இந்திய ராணுவமம் பாகிஸ்தானின் ஒன்பது இலக்குகளை தாக்கின. அதில் ஏழு மட்டுமே அழிக்கப்பட்டன. இந்த (ஒன்பது) இலக்குகளில், லாகூருக்கு அருகே முரிட்கேவில், லஷ்கா்-இ-தொய்பா தலைமையகம் மற்றும் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது (ஜேஇஎம்) தலைமையகம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
அவை அதி துல்லிய தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டன. இந்திய தரப்பு வேண்டுமென்றே பாகிஸ்தானின் ராணுவ நிலைகள் அல்லது பொதுமக்கள் வாழும் பகுதிகளை இலக்கு வைக்கவில்லை என்றாா் மேஜா் ஜெனரல் காா்த்திக் சி.சேஷாத்திரி.