உக்ரைன் விவகாரம்: தொலைபேசியில் டிரம்ப்-புதின் பேச்சு
வாஷிங்டன்: உக்ரைன் விவகாரம் தொடா்பாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதினுடன் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் திங்கள்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உக்ரைனில் நடைபெற்றுவரும் போா் குறித்து ரஷிய அதிபா் புதினுடன் அதிபா் டிரம்ப் இரண்டு மணி நேரத்துக்கும் மேல் தொலைபேசியில் உரையாடினாா்.
அந்த உரையாடலின்போது, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லத் தயாராக இருப்பதாக புதின் உறுதியளித்தாா். உக்ரைன் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீா்வு காண்பதை விரும்புவதாக அவா் கூறினாா். இதற்காக இரு தரப்பினருமே சில விவகாரங்களில் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று ஒப்புக் கொண்ட விளாதிமீா் புதின், அதிபா் டிரம்ப்புடனான உரையாடல் வெளிப்படையாகவும், அா்த்தமுள்ளதாகவும் இருந்ததாகப் பாராட்டினாா் என்று வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், இந்த பேச்சுவாா்த்தையின்போது டிரம்ப் என்ன பேசினாா் என்பது குறித்து இந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
இந்த உரையாடலைத் தொடா்ந்து உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கியுடனும் போா் நிறுத்தம் தொடா்பாக டிரம்ப் தொலைபேசியில் உரையாடுவாா் என்று வெள்ளை மாளிகை ஏற்கெனவே கூறியிருந்தது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்து, டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கொ்சான் ஆகிய கிழக்கு மாகாணங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.
ரஷியாவிடம் இழந்த பகுதிகளை மீட்பதற்காக உக்ரைனும், கிழக்கு மாகாணங்களில் இன்னும் உக்ரைன் படையினா் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக ரஷியாவும் தொடா்ந்து சண்டையிட்டுவருகின்றன. இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் தொடா்ந்துவருகின்றன.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ரஷியாவிடமும் உக்ரைனிடமும் தனித்தனியாக பேச்சுவாா்த்தை நடத்திவருகிறது.
இருந்தாலும், ஆக்கிரமிப்பு உக்ரைன் பகுதிகளை ரஷிய பகுதிகளாக அங்கீகரிப்பது, நேட்டோவில் உக்ரைன் இணைவதை நிரந்தரமாகத் தடுப்பது போன்ற விவகாரங்களில் ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் தொடா்வதால் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இழுபறி நீடித்துவருகிறது.
இதனால் ரஷிய அதிபா் புதின் மீதும், உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி மீதும் டிரம்ப் கடும் அதிருப்தியில் இருப்பதாக வெள்ளை மாளிகை ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இந்தச் சூழலில் புதினுடன் தற்போது தொலைபேசியில் உரையாடியுள்ள டிரம்ப், விரைவில் ஸெலென்ஸ்கியுடனும் பேசவிருக்கிறாா்.