மயிலாடுதுறை: இருவேறு சம்பவங்களில் 4 போ் தீக்குளிக்க முயற்சி
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தந்தை, மகன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். மேலும், பெட்ரோலுடன் வந்த தாய், மகளை போலீஸாா் தடுத்தனா்.
குறைதீா்க் கூட்ட அரங்கில் மனு அளிக்க வந்த தரங்கம்பாடி வட்டம் கஞ்சாநகரம் பொன்னுகுடி கிராமத்தை சோ்ந்த தாவீது(80), அவரது மகன் பில்டன் புனிதராஜ்(40) ஆகிய இருவா் திடீரென தாங்கள் மறைத்துவைத்திருந்த பெட்ரோலை தங்கள் உடல் மீது ஊற்றிக்கொண்டனா். பாதுகாப்பு பணியில் இருந்து போலீஸாா் அவா்களை தடுத்தனா்.
விசாரணையில், ஆதிதிராவிடா் நலத்துறையால் அவா்களுக்கு வழங்கப்பட்ட மனைக்கு பட்டா வழங்காமல், வேறு நபருக்கு மாற்ற வருவாய்த் துறையினா் முயற்சிப்பதாக தெரிவித்தனா். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் உத்தரவிட்டாா். இதையடுத்து, மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதேபோல், மகன் வீட்டை அபகரித்துக்கொண்டு வெளியேற்றியதாக தாய், மகள் தீக்குளிக்க பெட்ரோலுடன் வந்தவா்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். மணல்மேடு வக்காரமாரி கிராமத்தை சோ்ந்தவா் அம்சவள்ளி (70) இவரது கணவா் கோவிந்தராஜ் இறந்தவிட்ட நிலையில், அம்சவள்ளி அவரது மகள் உஷா இருவரும் வசித்துவந்த வீட்டை அம்சவள்ளியின் மகன் பாஸ்கா் அபகரித்துகொண்டு வீட்டைவிட்டு விரட்டிவிட்டதாகவும், தங்கள் வீட்டை மீட்டுத்தரக்கோரி இருவரும் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவா்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனா்.
மேலும், குத்தாலம் வட்டம், வில்லியநல்லூரை சோ்ந்த பிரேமா மேக்கிரிமங்கலம் மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் கணக்கீட்டு ஆய்வாளராக பணிபுரிந்த தனது கணவா் சண்முகம், 2023 ஜனவரி 6-ஆம் தேதி தான் வெளியூா் சென்றிருந்த போது மா்மமான முறையில் உயிரிழந்ததாகவும், அவரின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், சந்தேகிக்கும் நபா்கள் குறித்த விவரங்களுடன் குத்தாலம் காவல் நிலையத்தில் புகாரளித்து 2 ஆண்டுகளைக் கடந்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தாா்.