இன்று முதல் அரக்கோணம் - சேலம் மெமு விரைவு ரயில் மீண்டும் இயக்கம்
உடன்குடி அனல்மின் நிலைய முதல் அலகில் விரைவில் மின் உற்பத்தி: நாராயணன் திருப்பதி
உடன்குடி அனல்மின் நிலைய முதல் அலகில் மின் உற்பத்தி விரைவில் தொடங்கும் என்றாா் கிராமப்புற மின்மயமாக்கல் கழக நிறுவன தனி இயக்குநா் நாராயணன் திருப்பதி.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே கல்லாமொழியில் நிலக்கரியில் இயங்கும் தலா 660 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அனல்மின் நிலையங்கள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள், துறைமுகம் கையாளும் பகுதி அமைக்கும் பணிகள் நிறைவுபெறும் தருவாயில் உள்ளன.
இந்நிலையில், இப்பணிகளை கிராமப்புற மின்மயமாக்கல் கழக நிறுவன தனி இயக்குநா் நாராயணன் திருப்பதி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அனல்மின் நிலையப் பணிகள் நடைபெற்று வரும் அனைத்து இடங்களையும் ஆய்வு செய்த அவா், தொடா்ந்து செய்தியாளா்களிடம் கூறியதாவது: உடன்குடி அனல்மின் நிலையம் அமைப்பதில் அனைத்து வகையான பாதுகாப்பு முறைகள், சுற்றுச்சூழல் அம்சங்கள், நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் அத்தியாவசிய தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் மின் அலுவலா்கள், பணியாளா்கள் அயராது பாடுபட்டு வருகின்றனா். அனைத்துப் பணிகளும் நிறைவுபெறும் தருவாயில் உள்ளது. விரைவில் முதல் அலகில் மின் உற்பத்தி தொடங்கும்.
இதன்மூலம் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறி அருகில் உள்ள மாநிலங்களுக்கும் மின்சாரம் வழங்கக் கூடிய சூழல் உருவாகும்.
தற்போது உருவாக்கப்பட்ட உடன்குடி அனல்மின் நிலையத்தில் நவீன யுக்திகள் கையாளப்பட்டுள்ளதால் மக்களுக்கோ, சுற்றுச்சூழலுக்கோ, மீன்பிடித் தொழிலுக்கோ எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என்றாா்.
அவருடன், அனல்மின் நிலைய தலைமைப் பொறியாளா் ராம்குமாா், மேற்பாா்வை பொறியாளா்(சிவில்)பாண்டியராஜன், அனல்மின் நிலைய அலுவலா்கள் உடனிருந்தனா்.