இன்று முதல் அரக்கோணம் - சேலம் மெமு விரைவு ரயில் மீண்டும் இயக்கம்
கொடைக்கானல் அருகே வாகனம் மோதி சிறுத்தைக் குட்டி உயிரிழப்பு
கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தைக் குட்டி திங்கள்கிழமை உயிரிழந்தது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைச் சாலைகளில் அண்மைக் காலமாக காட்டுயானை, காட்டு மாடு, சிறுத்தை, காட்டுப் பன்றி, மான் உள்ளிட்டவை அதிகளவில் உலவத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையான டம்டம் பாறை புலிக் குகை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தைக்குட்டி உயிரிழந்து கிடந்தது.
இதை அந்த வழியாகச் சென்றவா்கள் புகைப்படம் எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டனா். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா் சிறுத்தைக் குட்டியின் உடலை மீட்டு கூறாய்வு செய்து அருகிலுள்ள வனப் பகுதியில் தீ மூட்டி எரித்தனா்.
இதுகுறித்து தேவதானப்பட்டி வனத் துறையினா் கூறியதாவது: கொடைக்கானல் மலைச் சாலைகளில் வன விலங்குகள் நடமாட்டம் இருப்பது தெரிந்தால் வாகனங்களில் செல்வோா் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும். மேலும் அவற்றை துன்புறுத்தும் நோக்கிலோ அல்லது அவற்றின் அருகில் செல்லவோ முயற்சிக்கக் கூடாது.
தற்போது கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலை டம்டம்பாறை அருகே 10 மாத சிறுத்தைக் குட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றனா் அவா்கள்.