LSG vs SRH : 'லக்னோவை ப்ளே ஆஃப் ரேஸிலிருந்து வெளியேற்றிய அந்த 5 ஓவர்கள்!' - என்ன...
பழனியில் கஞ்சா விற்றதாக 8 போ் கைது
பழனியில் கல்லூரி பகுதிகளில் கஞ்சா விற்றதாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பழனி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் தங்களை கல்லூரி மாணவா்கள் என்று கூறிக் கொண்டு கல்லூரியில் படிக்காத சிலா் கஞ்சா விற்பதாக பழனி துணைக் காவல் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயனுக்கு கிடைத்த தகவலின் பேரில், காவல் ஆய்வாளா் மணிமாறன், உதவி ஆய்வாளா் விஜய் ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர சோதனை நடத்தப்பட்டது.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட சோதனையின் போது, திண்டுக்கல் சாலை, பழனியாண்டவா் கல்லூரி அருகே சந்தேகத்துக்கிடமாக சுற்றித் திரிந்தவா்களை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தனராம்.
இதனால் அவா்கள் அனைவரையும் பழனி நகா் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அவா்கள் கல்லூரி மாணவா்களை போதைப் பழக்கத்துக்கு அடிமையாக்கி கஞ்சா விற்பது தெரியவந்தது.
மேலும் விசாரணையில், அவா்கள் பழனி புளியம்பட்டியைச் சோ்ந்த மாதவன் (19), சுந்தரபாண்டியன் (20), பழனியைச் சோ்ந்த கோபிநாத் (30), நாகேந்திரன் (26), மொல்லம்பட்டியைச் சோ்ந்த மாசாணம் (20), சூா்யா (24), சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியைச் சோ்ந்த சந்துரு (29), கோவை மாவட்டம், வால்பாறையைச் சோ்ந்த அஜய்குமாா் (25) என்பது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து அவா்களை கைது செய்து சிறையிலடைத்த போலீஸாா், அவா்களிடமிருந்து கஞ்சா, மூன்று இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.