``கேரள மக்கள் வாழ்க்கை அழகியலை எழுத்தில் வெளிப்படுத்தியவர்'' -எம்.டி.வாசுதேவன் நாயருக்கு புகழஞ்சலி!
கேரளாவின் பழம்பெரும் எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் நேற்று இரவு மரணமடைந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெற்றது. உடல்நலக்குறைவு காரணமாக கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் தனது 91-வது வயதில் மரணமடைந்துள்ளார்.
பாலக்காடு கூடலூரில் புன்னயூர்குளம் டி.நாராயணன் நாயர் - அம்மாளு அம்மா ஆகியோரது மகனாக 1933-ம் ஆண்டு ஜூலை 15-ம் தேதி பிறந்தார். மாடத்து தெக்கெர்ப்பொட்டு வாசுதேவன் நாயர் என்பதுதான் அவரது முழுப்பெயர். பிற்காலத்தில் எம்.டி.வாசுதேவன் நாயர் எனவும் மிகச்சுருக்கமாக எம்.டி எனவும் அழைக்கப்பட்டு பிரபலமானார்.
இவருடைய முதல் மனைவி பிரமிளா நாயர் 1999-ல் மரணமடைந்தார். பின்னர் நடனக்கலைஞர் கலாமண்டலம் சரஸ்வதி-யை திருமணம் செய்துகொண்டார். மரணத்துக்குப்பின் பெரிய ஹால் உள்ளிட்டவைகளில் தனது உடலை பொது அஞ்சலிக்காக வைக்கக்கூடாது. தன்னால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதுபோன்ற தனது விருப்பங்களை ஏற்கெனவே அவர் குடும்பத்தினரிடம் தெரிவித்திருந்தார். அதன்படி அவரது நல்லடக்கம் நடைபெற்றது.
எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் மறைவை ஒட்டி இன்றும், நாளையும் அனைத்து அரசு பொது நிகழ்ச்சிகளும் ரத்துச் செய்யப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இன்று நடைபெற இருந்த அமைச்சரவை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
எம்.டி.வாசுதேவன் நாயரின் உடலுக்கு முதல்வர் பினராயி விஜயன் உள்பட பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். எம்.டி.வாசுதேவன் நாயரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியபின் முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், "கேரளாவையும் மலையாளத்தையும் உலகம் முழுவதும் கொண்டுசென்ற மகான் விடைபெற்றுள்ளார். அவரது மறைவு கேரளாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாகும். நம் கலாச்சாரத்தை பெரிய அளவில் உயர்த்திப்பிடிக்க எம்.டி செய்த சேவைகளை மறக்கமுடியாதவை. பல்வேறு துறைகளில் அவரது திறமையை வெளிப்படுத்தி உள்ளார். சிறு கதைகள், நாவல்கள், திரைக்கதை, திரைப்பட இயக்குநர், பத்திரிகையாளர், கலாச்சார நாயகன் என எழுத்து, கலை, கலாச்சார உலகில் நிறைந்து நின்றவர் எம்.டி.வாசுதேவன் நாயர்.
கேரள மக்களின் வாழ்க்கை அழகியலை தன் எழுத்தின் மூலம் வெளிப்படுத்தியவர். கேரளத்தின் தனி மனிதன் முதல், சமூகத்தின் மனங்களையும் தனது எழுத்தின் மூலம் வெளியே கொண்டுவந்தவர் அவர். நாலுகட்டு, ரண்டாமுளவு ஆகிய அவரது நாவல்கள் மலையாளத்தின் கிளாசிக் ரசனையாகும்.
70 ஆண்டுகளாக சாதாரண நபர்களுக்கும், மேதைகளும் ஒரே மாதிரியாக புரிந்துகொள்ளும் வகையிலான படைப்புகளை உருவாக்கியவர் எம்.டி. வாசுதேவன் நாயர். அதனால்தான் அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான ஞானபீடம் முதல் பத்மபூஷன் வரை உள்ள விருதுகள் அவரை தேடிவந்தன. கேரள சாகித்ய அகடாமியின் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துவந்தார். மதசார்பற்ற, எந்த மத நம்பிக்கையாளர்களையும் நோகடிக்காத கதாபாத்திரங்களை அவர் உருவாக்கினார். அவருக்கு உலகம் எங்கும் உள்ள கேரள மக்கள் சார்பிலும், மாநில அரசு சார்பிலும் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்." என்றார்.