ஜப்பான் ஏர்லைன்ஸில் சைபர் தாக்குதல்; விமானங்கள் தாமதம், டிக்கெட் விற்பனை நிறுத்த...
`கேரள, மணிப்பூர் உட்பட ஐந்து மாநில ஆளுநர்கள் மாற்றம்' - குடியரசுத் தலைவர் உத்தரவு
ஒடிசா ஆளுநரின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டு, கேரளா, ஒடிசா உட்பட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இரண்டு சமூகத்துக்கு மத்தியில் தொடர்ந்து வரும் வன்முறைக் கலவரம், இதுவரை மணிப்பூர் கலவரத்துக்காக மணிப்பூர் செல்லாத பிரதமர் மோடி மணிப்பூர் செல்ல வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் தொடர் அழுத்தம், தொடர்ந்து ஏற்பட்டுவரும் உயிரிழப்புகள் என இடியாப்ப சிக்கலாக இருக்கும் மாநிலமான மணிப்பூருக்கு முன்னாள் உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
ஆளுநராகப் பதவி ஏற்றது முதல் தற்போதுவரை தொடர்ந்து சலசலப்பையும், மாநில அரசின் அதிருப்தி, விமர்சனங்களுக்கு ஆளாகும் ஆளுநர்களில், தமிழ்நாட்டின் ஆளுநர் ரவிக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமதுகான். இவருக்கு எதிராகப் போராட்டம் கூட நடத்தப்பட்டது. எனவே, தமிழ்நாட்டைப் போல கேரள மாநிலமும் ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என குரல் கொடுத்துவந்தது. அல்லது நடுநிலையான ஆளுநரை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தது.
இந்த நிலையில், பீகார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் கேரளாவுக்கும், ஆரிப் முகமது கான் பீகாருக்கும் மாற்றப்பட்டிருக்கிறார்கள். ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ் ராஜினாமா செய்துள்ளார். எனவே அவருக்கு பதிலாக மிசோரம் ஆளுநராக உள்ள ஹரிபாபு ஒடிசா ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். முன்னாள் ராணுவ தளபதி விஜய குமார் கே.சிங், மிசோரம் ஆளுநராகவும் நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.