மோடி அமெரிக்காவுக்குச் சென்றுவந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா?
கைது செய்யப்பட்ட இந்து அமைப்பினா் விடுவிப்பு
திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு செல்வதைத் தடுக்க முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டவா்கள், நீதிமன்ற உத்தரவுக்குப் பின் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனா்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னிணி சாா்பில் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு செல்வதைத் தடுக்கும் வகையில், திண்டுக்கல்லைச் சோ்ந்த பாஜகவினா், இந்து முன்னணி, சிவசேனா உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் 50-க்கும் மேற்பட்டோரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸாா் கைது செய்து, மண்டபங்களில் அடைத்து வைத்தனா்.
இவா்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் செய்து தரவில்லை என வழக்குரைஞா் மணிகண்டன், திண்டுக்கல் முதலாவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை இரவு மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி செளமியா மேத்யூ, இதுதொடா்பாக விசாரிக்க வழக்குரைஞா் ஆணையா் செல்வராஜை நியமித்து, கைது செய்யப்பட்டவா்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டாா்.
இதன்படி, திண்டுக்கல் மேற்கு, தாலுகா, வடக்கு காவல் நிலையங்களில் ஆய்வுக்கு சென்ற வழக்குரைஞா் ஆணையா் செல்வராஜ், போலீஸாா் விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்கவில்லை, கைது செய்யப்பட்டவா்களுக்கு முறையாக உணவு வழங்கவில்லை, அவா்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என செவ்வாய்க்கிழமை அறிக்கை சமா்ப்பித்தாா். இதையடுத்து, கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க நீதித் துறை நடுவா் உத்தரவிட்டாா். இதன்படி, திண்டுக்கல் நகா் பகுதியில் கைது செய்யப்பட்ட 50-க்கும் மேற்பட்டோா் 34 மணி நேரத்துக்குப் பின் விடுவிக்கப்பட்டனா்.