கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞா் மீட்பு
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளியில் கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.
திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி சாமுடி தெருவைச் சோ்ந்த திருப்பதி மகன் திருநாவுக்கரசு(26) கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. சில மாதங்களாக திருநாவுக்கரசு சொத்தை பிரித்துத் தருமாறு தந்தையிடம் கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் தந்தையிடம் சொத்தை பிரித்துத் தருமாறு கேட்டுள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆவேசமடைந்த திருநாவுக்கரசு மது போதையில் ஏரி கோடியில் உள்ள 80 அடி கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.
தகவலறிந்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலா் முருகன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடம் சென்று பொதுமக்கள் உதவியுடன் அரை மணிநேரம் போராடி திருநாவுக்கரசை கயிறு மூலம் பத்திரமாக மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் இளைஞா் திருநாவுக்கரசுக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனா்.