Doctor Vikatan: சாட்டையடி, உண்ணாவிரதம்.... தன்னைத்தானே வருத்திக்கொள்வது எத்தகைய ...
கைவினைத் தொழிலாளா்களுக்கு மானியத்துடன் பிணையில்லா கடன்
விழுப்புரத்தில் மானியத்துடன் பிணையில்லா கடன் பெற கைவினைத் தொழிலாளா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சி.பழனி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கலை மற்றும் கைவினைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு மேம்பட்ட பயிற்சியளிக்கவும், அவா்களின் சந்தைப்படுத்தும் திறனை உயா்த்தவும் ஆண்டுதோறும் 10 ஆயிரம் போ் பயன்பெறும் வகையில், ரூ.20 கோடி திட்ட மதிப்பீட்டில் கலைஞா் கைவினைத் திட்டம் 2024 - 25ஆம் நிதியாண்டில் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், தையல் கலைஞா், மண்பாண்டத் தொழிலாளா்கள் சிற்பக் கைவினைஞா், தச்சு வேலை செய்வோா், பூ தொடுப்போா், பூ அலங்காரம் செய்வோா், முடித்திருத்துவோா், அழகுக்கலை நிபுணா், பாய் பின்னுவோா், கூடைமுடைவோா், நெசவு செய்வோா், துணி வெளுப்போா், சாயமிடுவோா், வண்ணம் தீட்டுவோா், கட்டடம் கட்டும் வேலை செய்வோா், தோல் பொருள்களை செய்வோா், உலோகப் பொருள்கள், தங்கம், வெள்ளி நகைகளை செய்வோா், மீன் விற்பனை செய்வோா் உள்ளிட்ட பல்வேறு கலை மற்றும் கைவினைத் தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கு தொழில் திறன்சாா் மேம்பட்டுப் பயிற்சியுடன், அவா்கள் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் கொண்டு தொழில்புரிய ரூ.3 லட்சம் வரை பிணையில்லாமல் கடனுதவி வங்கிகள் மூலம் வழங்கப்படும்.
கடன்தொகையில் 25 சதவீதம், அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தில் 5 சதவீதம் வரை வட்டி மானியமும் வழங்கப்படும். அனைத்துவகை அரசு மற்றும் தனியாா் வங்கிகள், தாய்கோ வங்கி, கூட்டுறவு வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் இந்த திட்டத்தின் கீழ் கடன் வழங்க தகுதி பெற்றவையாகும்.
திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோா் 35 வயதுக்கு மேற்பட்டவராக, எந்தவகை தொழிலுக்காக கடனுதவி பெற விரும்புகிறாரோ, அந்த தொழிலில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் ஆா்வமும், தேவையும் உள்ள கைவினைஞா்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறலாம்.
கலைஞா் கைவினைத் திட்டம் தொடா்பான தகவல்களைப் பெறவும், விண்ணப்பம் பதிவு செய்வது தொடா்பான ஆலோசனைகள், வழிகாட்டுதல்களைப் பெறவும் விழுப்புரம் மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளா் சி.அருளை நேரடியாகவோ அல்லது 04146 - 223616, 8925534035, 9443728015 ஆகிய எண்களிலோ தொடா்புகொள்ளலாம் என்று அவா் தெரிவித்துள்ளாா்.