கொடி கம்ப விவகாரம்: `அதிகாரிகள் மீது தாக்குதல்' - விசிகவினர் 21 பேர் மீது வழக்குப்பதிவு!
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உள்பட 21 பேர் மீது 8 பிரிவுகளில் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 8-ஆம் தேதி மதுரை வந்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள வெளிச்சநத்தம் கிராமத்தில் 45 அடி உயர கொடி கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்து உரையாற்றி சென்றார்.
அதைத் தொடர்ந்து அனுமதி இல்லாமல் விசிகவினர் கொடி கம்பம் அமைத்ததை தடுக்கத் தவறியதாக வருவாய் ஆய்வாளர் அனிதா, கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம், கிராம உதவியாளர் பழனியாண்டி ஆகியோர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அரசு ஊழியர்கள், விசிக-வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நேற்று வெளிச்சநத்தத்தில் அனுமதியின்றி விசிக-வினர் கொடி கம்பம் அமைத்ததை விசாரிக்கச் சென்ற துணை வட்டாட்சியர் ராஜேஷ், வருவாய் ஆய்வாளர் அனிதா, கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம், கிராம உதவியாளர் பழனியாண்டி ஆகியோரை விசிகவினர் தாக்கியதாக கிராம நிர்வாக அலுவலர் பரமசிவம் அளித்த புகாரின் அடிப்படையில், விசிக-வின் மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் அரச முத்துப்பாண்டியன் என 5 விசிக நிர்வாகிகள் உள்பட 21 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு ஊழியர்கள் மீது தாக்குதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிய அனுமதியின்றி கொடி கம்பம் நடப்பட்டதாக ஏற்கெனவே சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் கட்சி கொடியேற்றும் சம்பவத்தில் மாவட்ட நிர்வாகத்துக்கும், விசிக நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருவது சர்ச்சையை உண்டாக்கி வரும் நிலையில், சமீப நாட்களாக விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவினால் திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு, அதன் பின்பு ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டு சமரசமாகி வரும் நிலையில், மதுரை மாவட்டத்தில் கொடி கம்ப விவகாரத்தில் அரசு ஊழியர்கள் மீதும், விசிக நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் விசிக-வினரை கொந்தளிக்க வைத்துள்ளது.
விசிகவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் கலெக்டர் சங்கீதாவை எதிர்த்து வருகின்ற 16 ஆம் தேதி மாபெரும் ஆர்பாட்டம் நடத்த உள்ளதாக விசிகவினர் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே கொடி கம்ப விவகாரத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் பழிவாங்கப்படுவதாகவும், அவர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை கண்டித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினார்கள். வருவாய்த்துறையினரின் போராட்டத்தால் மாவட்ட நிர்வாகம் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, பணி இடை நீக்க உத்தரவை கலெக்டர் ரத்து செய்யாவிட்டால் மாநில அளவில் தொடர் போராட்டம் நடத்துவோம் என்று அரசு ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கொடி கம்ப விவகாரத்தால் மதுரை மாவட்டத்தில் கொந்தளிப்பான நிலை ஏற்பட்டுள்ளது.