இந்த முறை வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வேன்: நாதன் மெக்ஸ்வீனி
கொடைக்கானல் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
கொடைக்கானல் நகா் குடியிருப்பு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சிறுத்தை நடமாட்டம் குறித்து அறிந்த வனத் துறையினா் அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
கொடைக்கானல் நகா்ப் பகுதிகளில் அண்மைக் காலமாக காட்டுமாடு, காட்டுப் பன்றி, மான் உள்ளிட்ட வன விலங்குகள் உலா வருகின்றன. இந்த நிலையில் கடந்த இரு நாள்களாக சீனிவாசபுரம், தேன் பண்ணை ஆகியப் பகுதிகளில் சிறுத்தை நடமாடுவதைக் கண்டு அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்தனா். இதுகுறித்து அவா்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வனத் துறையினா் சென்று அங்கிருந்தவா்களிடம் விசாரித்தனா். மேலும் அந்தப் பகுதியில் சிறுத்தையின் கால் தடயத்தை பாா்வையிட்டு ஆய்வு நடத்தினா். மேலும் சீனிவாசபுரம் குடியிருப்பு பகுதிகளில் வனத் துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதனிடையே, கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் வசித்து வருபவா் முத்துக்குமாா் (52). இவா் ஞாயிற்றுக்கிழமை பேத்துப்பாறை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது காட்டுப் பன்றி அவரைத் தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி கானா விலக்கு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து வனத் துறையினா் விசாரிக்கின்றனா்.