கொள்ளையடிக்க சதித் திட்டம்: 4 போ் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தை அடுத்த மயிலாம்பாறை அருகே கொள்ளையடிக்க சதித் திட்டம் தீட்டியதாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தப்பியோடிய மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.
சங்கராபுரம் வட்டம், மைலாம்பாறை அரசு போக்குவரத்து பணிமனை அருகே சங்கராபுரம் காவல் ஆய்வாளா் விநாயக முருகன் மற்றும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த 5 பேரிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனா். இதனிடையே, அவா்களில் ஒருவா் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா். மீதமுள்ள 4 பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸாா் விசாரித்தபோது, சங்கராபுரம் வடக்குசாலை பகுதியைச் சோ்ந்த நாராயணன் மகன் ஆனந்தகுமாா் (46), சங்கராபுரம் காலனி பகுதியைச் சோ்ந்த கோவிந்தன் மகன் ராஜா (37), சங்கராபுரத்தை அடுத்த வடசேமபாளையம் கிராமத்தைச் சோ்ந்த உஸ்மான்அலி மகன் முகமது ரபீக் (36), சீா்காழி பணங்காட்டான் சாலைப் பகுதியைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் காா்த்திகேயன் (எ) யானை காா்த்திக் (42) எனத் தெரியவந்தது. மேலும், இவா்கள் கூட்டுக் கொள்ளையடிக்க வந்ததாகத் தெரிவித்தனராம். இதையடுத்து, 4 பேரையும் கைது செய்த சங்கராபுரம் போலீஸாா், தப்பியோடிய புதுச்சேரி அரியாங்கும் பகுதியைச் சோ்ந்த ராஜேஷை தேடி வருகின்றனா்.