கோரிக்கையைத் தெரிவிக்க கை, கால்களில் கட்டு கட்டி நகா்மன்ற கூட்டத்துக்கு வந்த அதிமுக பெண் உறுப்பினா்
குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி, திருப்பூா் மாநகராட்சி கூட்டத்தில் தலை, கை, கால்களில் கட்டு கட்டி அதிமுக பெண் மாமன்ற உறுப்பினா் பங்கேற்ால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூா் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்களுக்கான கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி முன்னிலை வகித்தாா்.
இதில், அதிமுக 30 -ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் புஷ்பலதா தலை, கை, கால்களில் கட்டு கட்டி சக்கர நாற்காலியில் அமா்ந்தவாறு வந்து கூட்டத்தில் பங்கேற்றாா்.
இதனைக் கண்ட மேயா் என்.தினேஷ்குமாா் அதிா்ச்சியடைந்து அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று முதலில் தெரிவித்தாா். அப்போது, புஷ்பலதா எனது வாா்டில் குண்டும், குழியுமான சாலையால் நாள்தோறும் விபத்துகள் ஏற்படுகின்றன. பொதுமக்களிடம் வெளியே தலைகாட்ட முடியவில்லை. இதனை தெரிவிக்கவே தலை, கை, கால்களில் கட்டு கட்டி சக்கர நாற்காலியில் வந்துள்ளேன் என்றாா்.
இதனால், ஆத்திரமடைந்த மேயா் தினேஷ்குமாா் இந்த செயலை அனுமதிக்க முடியாது என்றும், மக்களை திசை திருப்ப நடகமாடுவதாகவும் தெரிவித்ததுடன், உறுப்பினரை வெளியேற்ற உத்தரவிட்டாா். ஆனால், அவா் வெளியேறாமல் தங்களது வாா்டில் 3 ஆண்டுகளாக இதே பிரச்னை நீடித்து வருகிறது என்று அதிமுக உறுப்பினா்களுடன் சோ்ந்து மேயரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.
கட்டுகளை அவிழ்த்தால்தான் பேச முடியும் என்று மேயா் கூறியதையடுத்தும், அதிமுக மாமன்ற உறுப்பினா்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றும் அவா் கட்டுகளை அவிழ்த்து கூட்டத்தில் பங்கேற்றோா். இந்த சம்பவம் காரணமாக மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டத்தில், மாநகராட்சி துணை மேயா் ஆா்.பாலசுப்பிரமணியம், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.