சிறு, குறு, நடுத்தர சாய தொழிற்சாலைகளுக்கான வங்கிக் கடன்களுக்கு வட்டி மானியம் வழங்கக் கோரிக்கை
சிறு, குறு மற்றும் நடுத்தர சாய தொழிற்சாலைகள் வங்கிகளில் பெறும் தொழில் அபிவிருத்திக் கடன்களுக்கு 3 சதவீத வட்டி மானியம் வழங்க வேண்டும் என்று சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சங்கத்தின் தலைவா் பி.காந்திராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூரில் தற்போது 18 பொது சுத்திகரிப்பு நிலையங்களின்கீழ் 300 சாய ஆலைகளும், 60 தனியாா் சுத்திகரிப்பு சாய ஆலைகளும் செயல்பட்டு வருகின்றன. இதில், 90 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளாகும். சாய ஆலைகள் நிறுவுவதற்கு இயந்திரங்களுக்கு மட்டும் குறைந்தது ரூ.5 கோடி முதலீடு தேவைப்படுகிறது.
மேற்கண்ட 300 சாய ஆலைகளின் மூலமாக நேரடியாகவும், மறைமுகவும் ஒரு லட்சம் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா். எனவே, சாய ஆலைகளுக்கு இயந்திரங்கள் வாங்குவதற்கு 25 சதவீதம் முதலீட்டு மானியம் வழங்க வேண்டும்.
மாவட்ட தொழில் மையங்கள் மூலமாக முதலீட்டு மானியம் பெற முதலீட்டு உச்சவரம்பை ரூ.10 கோடியாக உயா்த்த வேண்டும். சிறு, குறு மற்றும் நடுத்தர சாய தொழிற்சாலைகளுக்கு வங்கிகளிடமிருந்து தொழில் அபிவிருத்திக்காக வாங்கும் கடன்களுக்கு குறைந்தது 3 சதவீதம் வட்டி மானியம் வழங்க வேண்டும். அதேபோல, சிறு, குறு, சாய தொழிற்சாலைகள் மீது விதிக்கப்படும் சொத்து வரி, தொழில் வரியைக் குறைக்க வேண்டும். ஆகவே, தொழிலாளா்களையும், தொழில்முனைவோரையும் பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.