கூமாபட்டி கலவரம்: வழக்கு விவரங்களை அளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் கடிதம்
கோவில்பட்டி, கழுகுமலை பகுதிகளில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கோவில்பட்டி நகராட்சி, கழுகுமலை பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
சீவலப்பேரி கூட்டு குடிநீா் திட்டம், உள்ளூா் நீா் ஆதாரங்கள் மூலம் கழுகுமலை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீா் விநியோகப் பணிகள் குறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் கழுகுமலை தோ்வுநிலை பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, பேரூராட்சிக்கு உள்பட்ட 15ஆவது வாா்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தெருவில் உள்ள குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீா் விநியோகம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்த ஆட்சியா், அப்பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீரை அருந்தி அதன் தரத்தை ஆய்வு செய்தாா். பின்னா் கழுகுமலை பேருந்து நிலையம் அருகில் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் திருமண மண்டப கட்டுமானப் பணி, சரவணபொய்கை குளத்தில் ரூ.93 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணி, தடுப்புச் சுவா் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா்.
நாலாட்டின்புதூா் துணை சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், புறநோயாளிகள் வருகைப் பதிவேடு, மருந்து பொருள்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்தாா். மேலும் அங்கு சிகிச்சை பெற்று வரும் கா்ப்பிணி தாய்மாா்களின் விவரங்கள் குறித்தும், டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் கா்ப்பிணி தாய்மாா்களுக்கு உரிய தவணையில் நிதி உதவி வழங்கப்படுவது குறித்தும் கிராம சுகாதார செவிலியரிடம் கைப்பேசி மூலம் கேட்டறிந்தாா்.
பின்னா் கோவில்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள ராமசாமிதாஸ் நினைவு பூங்காவை பாா்வையிட்ட ஆட்சியா், அங்குள்ள உடற்பயிற்சிக் கூடம், அறிவுசாா் மையம், சுகாதார வளாகத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்து, நடைபாதையில் ஏற்பட்ட உடைப்புகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களைக் கேட்டுக் கொண்டாா். தொடா்ந்து, கோவில்பட்டியில் சுமாா் 3.25 ஏக்கா் பரப்பளவில் ரூ.8.50 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் தினசரி சந்தை கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு, உரிய காலத்திற்குள் பணிகளை முடிக்க அலுவலா்களிடம் கேட்டுக் கொண்டாா்.
ஆய்வின்போது கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் மகாலட்சுமி, கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி, நகராட்சி ஆணையா் கமலா, செயற்பொறியாளா் சனல்குமாா், கழுகுமலை பேரூராட்சி துணைத் தலைவா் சுப்பிரமணியன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் ராமசாமி, பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளா் ஹரிஹரன், கோவில்பட்டி வட்டாட்சியா் சரவணப்பெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.