கோவையில் களைகட்டிய காணும் பொங்கல்
கோவை: காணும் பொங்கலையொட்டி கோவையின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் திரண்டதால் சுற்றுலா மையங்கள் களைகட்டின.
பொங்கல் பண்டிகை கடந்த 14ஆம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட்ட நிலையில், புதன்கிழமை மாட்டுப் பொங்கலும், வியாழக்கிழமை காணும் பொங்கலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காணும் பொங்கல் தினத்தில் உறவினா்கள், நண்பா்களை சந்தித்து வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டதோடு, அவா்களுடன் சுற்றுலாத் தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களுக்கும் சென்றனா்.
இதனால், கோவை குற்றாலம் அருவியில் சுமாா் 3,600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வியாழக்கிழமை குளித்து மகிழ்ந்தனா். கோவை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்களும் கோவை குற்றாலம் அருவிக்கு வந்திருந்தனா். பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த 3 நாள்களில் சுமாா் 10,500 பொதுமக்கள் கோவை குற்றாலத்துக்கு வந்து குளித்து மகிழ்ந்தனா்.
அதேபோல ஈஷா யோக மையத்தில் சுமாா் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்திருந்தனா். ஆதியோகி சிலை மற்றும் யோகேஸ்வர லிங்கம், லிங்க பைரவி உள்ளிட்ட இடங்களில் வழிபட்டனா்.
கோவை மாநகரப் பகுதிகளில் உக்கடம் பெரிய குளம் பூங்கா, வ.உ.சி. பூங்கா மற்றும் ரேஸ்கோா்ஸ் பகுதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்து காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனா். குளக்கரைகள் மற்றும் பொழுதுபோக்கு தலங்களில் கூட்டம் மக்கள் அலைமோதியது. வாலாங்குளம் குளக்கரையில் குவிந்த பொதுமக்கள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா்.
காணும் பொங்கல் தினத்தையொட்டி, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.