கோவையில் நாளை கன மழை: தனியாா் வானிலை ஆய்வாளா் தகவல்
கோவையில் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பா் 1) கன மழை பெய்யும் என்று தனியாா் வானிலை ஆய்வாளா் தெரிவித்துள்ளாா்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் புதிதாக உருவாகியிருக்கும் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா். இந்நிலையில், புயல் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று கோவை தனியாா் வானிலை ஆய்வாளா் சந்தோஷ் கிரிஷ் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் கூறியிருப்பதாவது: கோவை நகரம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் மிக கனமழை பெய்யும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை காலைக்குள் புயலானது பாண்டிச்சேரி அருகே கரையைக் கடந்து சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை வழியாக ஞாயிற்றுக்கிழமை மாலை அல்லது திங்கள்கிழமை செல்லும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோவையில் 1977- ஆம் ஆண்டுக்குப் பிறகு பெய்யக்கூடிய புயல் மழையாக இது இருக்கும். புயல் கோவையைக் கடக்கும்போது வலுவிழந்து இருக்கும் என்றாலும் மழை மேகங்கள் நன்றாக இருக்கும். அதேபோல, நீலகிரி மாவட்டத்திலும் மிகக் கனமழை பெய்யும். அதிகப்படியான மழையால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்படவும் வாய்ப்புள்ளது என்றாா்.
இதற்கிடையே கோவை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நகரின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழை பெய்தது.