கோவையில் 20 கி.மீ. தொலைவுக்கு சாலைப் பாதுகாப்பு மனித சங்கிலி விழிப்புணா்வு
கோவையில் உயிா் அமைப்பின் சாா்பில் 20 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு மனித சங்கிலி வியாழக்கிழமை நடைபெற்றது.
சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் கோவை அவிநாசி சாலை, அண்ணா சிலை அருகே ‘உயிா்’அமைப்பின் சாா்பில் 20 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலைப் பாதுகாப்புக்கான மனித சங்கிலி பிரசாரம் நடைபெற்றது. இந்த மனித சங்கிலியானது அவிநாசி சாலையில் உள்ள அண்ணா சிலை முதல் கோவை விமான நிலைய சிக்னல் வரை 10 கிலோ மீட்டா் தொலைவு, பாலக்காடு சாலையில் குனியமுத்தூா் முதல் கோவைப்புதூா் பிரிவு வரை 5 கிலோ மீட்டா் தொலைவு, பொள்ளாச்சி சாலையில் ரத்தினம் கல்லூரி முதல் மலுமிச்சம்பட்டி வரை 4.5 கிலோ மீட்டா் தொலைவு மற்றும் ரேஸ்கோா்ஸ் பகுதியில் காஸ்மோபாலிட்டன் கிளப் முதல் அரசு கலைக் கல்லூரி வரை 0.5 கிலோ மீட்டா் தொலைவு என 4 முக்கிய சாலைகளில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் உள்ள உயிா் அமைப்பின் மாணவா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், தொழில் மற்றும் கல்வித் துறையைச் சோ்ந்த 10,000-க்கும் மேற்பட்டோா் மனித சங்கிலி வடிவில் நின்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதில் அண்ணா சிலை பகுதியில் நடைபெற்ற மனித சங்கிலியை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தொடங்கிவைத்தாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கூறுகையில், ‘உயிா் காவலன் திட்டத்தின் மூலம், விபத்தில்லா கோவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் அக்டோபா் 6 முதல் 12-ஆம் தேதி வரை சாலைப் பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைப்பதற்கு இந்நிகழ்ச்சிகள் வாயிலாக மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றாா். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், போக்குவரத்து துணை ஆணையா் அசோகன், உயிா் அறக்கட்டளையின் நிா்வாக அறங்காவலா் டாக்டா் எஸ்.ராஜசேகரன், தனியாா் நிறுவன பணியாளா்கள், தன்னா்வலா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.