'ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் ஈரோடு கிழக்கில் காங் போட்டியில்லை!' - செல்வப்பெருந்...
கோவை: உயிரிழந்த தாய் யானை; அருகே பரிதவித்த குட்டி யானை... கூட்டத்துடன் சேர்க்க போராடும் வனத்துறை!
கோவை மாவட்டம் ஆனைகட்டி மற்றும் மருதமலை, தொண்டாமுத்தூர், ஆகிய பகுதிகளில் தற்போது ஏராளமான காட்டு யானைகளின் நடமாட்டம் காணப்படுகிறது.
நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை யானைகளின் இடம் பெயர்வு காலம் என்பதால் கேரள வனப்பகுதியில் இருந்து ஆனைகட்டி, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் வழியாக பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதிக்கு சென்று அங்கிருந்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக தெங்குமரஹடா,முதுமலை,பந்திப்பூர், என யானைகள் வலசை செல்வது வழக்கம், இந்த சமயங்களில் கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதி ஒட்டியுள்ள கிராமங்களில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படும்.
இந்நிலையில் நடந்த 20 நாட்களுக்கு மேலாக தொண்டாமுத்தூர், தடாகம் மற்றும் மருதமலை வனப்பகுதியில் ஏராளமான யானை நடமாட்டம் இருப்பதால் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி யானகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வருகின்றன. நேற்று இரவு தடாகம், மற்றும் வரப்பாளையம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்தது.
இதனை தொடர்ந்து அந்த காட்டு யானைகளை வனத்துறையினர், மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர். பின்னர் அங்கிருந்து வெளியே வந்தபோது தனியாக குட்டியானை இருப்பதை பார்த்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களின் ஆலோசனைப்படி அந்த குட்டி யானையை வனப்பகுதியில் உள்ள கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதே சமயம் அந்த குட்டியானை இருந்த இடத்திற்கு அருகே பெண் யானை ஒன்று உயிரிழந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வனப்பணியாளர்கள் யானை உயிரிழந்ததை உறுதி செய்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் தலைமையில் உதவி வன பாதுகாவலர் விஜயகுமார் மற்றும் வனக் கால்நடை மருத்துவர் சுகுமார் கோயம்பத்தூர் வனச்சரகர் திருமுருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து யானை உயிரிழந்தது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதே சமயம் உடன் இருந்த குட்டியை அருகில் உள்ள யானை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், "யானை குட்டி தனியாக இருப்பது குறித்து கிடைத்த தகவலை அடுத்து அதனை கூட்டத்துடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு இருந்தபோது அதன் தாய் யானை உயிரிழந்தது தெரியவந்தது. யானை உயிரிழப்பிற்கான காரணம் குறித்து பிரேத பரிசோதனை முடிவிலேயே தெரியவரும், வனப்பகுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் தனியார் நிலத்தில் யானை உயிரிழந்துள்ளதாகவும், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்று தெரிவித்தார்.