கோவை: மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கணவர் தற்கொலை!
சூலூர்: சூலூர் அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் கணவரும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டினம்புதூரில் வசிப்பவர் கிருஷ்ணகுமார் (வயது 45). அவரது மனைவி சங்கீதா (வயது 42). கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சங்கீதா ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
மலேசியாவில் கிருஷ்ணகுமார் பணிபுரிந்த நிலையில், தற்போது இந்தியாவுக்கு திரும்பி இங்கு வசித்து வந்தார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. கணவன் மனைவிி இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக குடும்பப் பிரச்னை இருந்து வந்துள்ளது.
மனைவி நடத்தையில் கிருஷ்ணகுமார் சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஆறு மாதங்களாக மனைவி சங்கீதா பட்டணம் புதூரிலும் கணவர் கிருஷ்ணகுமார் கேரள மாநிலம் வடக்கஞ்சேரியில் உள்ள தோட்டத்திலும் வசித்து வருகின்றனர்.
திங்கள்கிழமை(இன்று) காலை சுமார் 7.40 மணியளவில் குழந்தைகள் இருவரும் பள்ளிக்குச் சென்றுள்ளனர். அதன்பிறகு வடக்கஞ்சேரியில் இருந்து பட்டணம் புதூருக்கு வந்த கிருஷ்ணகுமாருக்கும மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
இதில், கோபமடைந்த கிருஷ்ணகுமார் துப்பாக்கியை எடுத்து சங்கீதாவின் மார்பு பகுதியில் சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து சங்கீதா ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். பின்னர், ஒரு போர்வையை எடுத்து சங்கீதாவின் மீது போர்த்தி வைத்துவிட்டு வீட்டை சாத்திவிட்டு பட்டணம் புதூரிலிருந்து வடக்கஞ்சேரி பகுதியில் உள்ள தனது தோட்டத்து வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு அதே துப்பாக்கியால் அவரும் சூட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
பட்டணம் புதூரில் வீட்டின் அருகே உள்ளவர்கள் அலறல் சத்தத்தைக் கேட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது சங்கீதா உயிரிழந்த நிலையில் கீழே ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இது பற்றி சூலூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த கருமத்தம்பட்டி உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் தங்கராமன் மற்றும் சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை உள்ளிட்டோர் சங்கீதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணகுமாரின் செல்போனுக்கு காவல்துறையினர் தொடர்புகொண்ட போது, மறுமுனையில் கேரள போலீசார் பேசியுள்ளனர். கிருஷ்ணகுமார் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து கேரள போலீசார் கிருஷ்ணகுமார் உடலையும் அங்கிருந்த துப்பாக்கியும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், குடும்பப் பிரச்னை குறித்து அப்பகுதியினர் வசிப்பவர்களுக்கான வாட்ஸ்அப் குழுவின் கிருஷ்ணகுமார் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக, அக்கம்பக்கத்தினரிடம் கோவை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.