பிரதமருடன் ராகுல் காந்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோசனை!
சகாயத்துக்கு பாதுகாப்பு அளிக்க மத்திய படைக்கு உத்தரவிட நேரிடும்: நீதிமன்றம் எச்சரிக்கை
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு ஏன் பாதுகாப்பு அளிக்கவில்லை என்று மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் தமிழக காவல்துறைக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
சட்டவிரோத கிரானைட் சுரங்க வழக்கு தொடா்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு மதுரை சிறப்பு நீதிமன்றம் கடந்த வாரம் அழைப்பாணை அனுப்பியிருந்தது.
ஆனால், தன்னுடைய பாதுகாப்பு காரணங்களால் அவரால், விசாரணைக்கு ஆஜராக இயலவில்லை என்றும், தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது நியாயமற்றது என்றும் அவா் கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து தமிழக காவல்துறை தரப்பில் சனிக்கிழமை அளித்த விளக்கத்தில்,
”கடந்த 2014 முதல் 2023-ஆம் ஆண்டு வரை அவரது பாதுகாப்புக்காக காவல் துறை சாா்பில் காவலா் ஒருவா் வழங்கப்பட்டது. 2023 -ஆம் ஆண்டு நடைபெற்ற பாதுகாப்பு மறுஆய்வு குழு கூட்டத்தின்போது, குறிப்பிடத்தக்க எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லாத 22 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை விலக்கிக் கொள்ள முடிவெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், சகாயத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பும் விலக்கிக்கொள்ளப்பட்டது.
எனினும், நீதிமன்றத்தில் எவ்வித பயமும் இன்றி சாட்சியங்களை அளிப்பதற்கு ஏதுவாக, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்றும் சகாயம் விசாரணைக்கு ஆஜராகாததை தொடர்ந்து, அவருக்கு ஏன் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், சகாயத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்காவிட்டால், மத்திய பாதுகாப்புப் படைக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.