ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் இந்தியாவுக்கு முதல்முறையாகப் பதக்கம்: தமிழகத்தின் ஆனந்த்கு...
"சசிகலா விடுதலையாகி வரும்போது கூட விடிய விடிய கூட்டம் வந்தது" - விஜய் பிரசாரம் குறித்து பி.மூர்த்தி
"திமுகவுக்காகப் பிரசாரம் செய்ய வந்த நடிகர் வடிவேலுவைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர்" என்று அமைச்சர் பி.மூர்த்தி பேசியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பி.மூர்த்தி, "மதுரை கிழக்கு, மேற்கு, மேலூர், சோழவந்தான் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளில் 'ஒரணியில் தமிழ்நாடு' மூலம் 2 லட்சத்து 4 ஆயிரத்து 588 குடும்பங்களைச் சேர்ந்த 5 லட்சத்து 54 ஆயிரத்து 742 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வெளிமாநிலங்களைப் போல தமிழகத்தில் வாக்காளர்கள் நீக்கம் செய்யக் கூடாது என்பதை ஒரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டங்களில் வலியுறுத்துகிறோம். தமிழகத்தின் மண், மொழி, மானத்தைக் காக்க ஒரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்க உள்ளனர்.
2011-ல் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்காகப் பிரசாரம் செய்த நடிகர் வடிவேலுவைப் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்தனர். விஜய் பிரசாரத்திற்குக் கூட்டம் வருவதைப் பற்றி நாங்கள் பேசவில்லை. அதுகுறித்து ரஜினியே பதில் சொல்லிவிட்டார். விஜய்யினால் திமுகவின் வாக்கு வங்கி பாதிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்.
சிறையில் இருந்து விடுதலையாகி சசிகலா சென்னை வரும்போது விடிய விடிய மக்கள் கூட்டம் வந்தது, ஆகவே கூட்டங்களை வைத்து அரசியல் பேசுவது சரியாகாது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பணிகளைத் தொடங்க உத்தரவிட்டுள்ளதால், மாவட்டம்தோறும் பணிகளைத் தொடங்கியுள்ளோம்.

செல்லூர் ராஜூ சட்டமன்ற உறுப்பினராக உள்ள மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் மக்களுக்கான திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. இதை அத்தொகுதி மக்களிடமே கேட்டுப் பாருங்கள். மேற்குத் தொகுதியில் குடிநீர் வசதி மட்டுமின்றி 744 சாலை வேலைகள் நடந்து வருகிறது. அத்தொகுதியில் முதலமைச்சர் யாரை வேட்பாளராக அறிவிக்கிறாரோ, அவரை 100 சதவிகிதம் வெற்றி பெற செய்ய பாடுபடுவோம்.
தொகுதிகளில் மக்களுக்கான பணிகளை நாங்கள் செய்து வருகிறோம். அதற்கான பலன்கள் எங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். சட்டமன்றத் தொகுதிகளில் பாகுபாடு பார்த்து பணிகள் செய்வதில்லை. அனைத்து மக்களுக்கும் உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டங்களின் கீழ் மக்களுக்கான பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.
மதுரை மாவட்டத்திலுள்ள அரசு அதிகாரி ஒரு நபர் சார்ந்து பணி செய்கிறார் எனச் சு.வெங்கடேசன் எம்பி கூறிய கருத்துக்கு அவர்தான் பதில் அளிக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் எந்த ஒரு அதிகாரியும் பாரபட்சமாகச் செயல்படவில்லை. மக்களுக்கான திட்டங்களைச் செய்து வருகின்றனர். மதுரையின் மாஸ்டர் பிளான் திட்டம் 20 நாட்களுக்குள் வெளியிடப்படும்" எனக் கூறினார்.