சட்டக் கல்லூரி காவலாளியைக் கடத்திய பாகிஸ்தான் பாதுகாப்புப் படை?
பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தின் சட்டக் கல்லூரியின் காவலாளியை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது.
பலோசிஸ்தானின் சங்காபாத் பகுதியைச் சேர்ந்தவர் சயீத் பலோச், இவர் பல ஆண்டுகளாக அங்குள்ள சட்டக் கல்லூரியில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், திடீரென மாயமான அவரை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர்தான் துர்பாத் நகரத்தின் மேற்கு பகுதியிலிருந்து கடத்தி சென்றுள்ளதாக பாகிஸ்தானின் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, மாயமான அவரைப் பற்றிய எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அவரது கடத்தலை நேரில் கண்ட நபர்களின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த செய்தி வெளியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை உண்டாகியுள்ளது.
இதையும் படிக்க: மெக்சிகோ பயங்கரவாதம்: ஒரே வாகனத்தில் 9 சடலங்கள், உடலில்லாத 8 கைகள்

இந்நிலையில், பலோச் தேசியவாத இயக்கத்தின் மனித உரிமைகள் பிரிவான பான்க், இந்த மாதத்தின் முதல் ஐந்து நாள்களில் மட்டும் குறைந்தது 48 நபர்கள் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டு மாயமாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதில், 35 பேர் மாயமானதற்கு முன்பு பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அம்மாகாணத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஐந்து பேர் காவலில் இருந்தபோது பலியானார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பலோசிஸ்தான் மாகாணத்தின் மக்கள் பாகிஸ்தான் அரசினால் கடத்தப்பட்டு மாயமாகும் விவகாரத்தை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கவனிக்க வேண்டும் என பான்க் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.