சட்டென மாறிய வானிலை.. தஞ்சை, பட்டுக்கோட்டையில் பலத்த மழை!
தஞ்சாவூர்: பகலை இரவு போல் ஆக்கியிருக்கிறது தஞ்சை மற்றும் பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பெய்து வரும் பலத்தமழை.
கடந்த ஒரு சில வாரங்களாகவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் பகல் நேரங்களில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதனால் பகல் வேளையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனை அடுத்து இன்று காலை முதலே வெயில் இன்றி மேகமூட்டத்துடன் மாவட்ட முழுவதும் இதமான சூழல் நிலவியது.
இந்த நிலையில் பட்டுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக பலத்தமழை பெய்து வருகிறது. இதனால் பகல் வேலையை இரவு போல் இருந்ததால் வாகன ஓட்டிகள் விளக்குகளை எரிய விட்டவாறே சென்றனர்.
இருள் சூழ்ந்த மேகக் கூட்டங்களால் பெரும்பாலான கடைகளில் விளக்கு எரிந்ததால் இரவா? பகலா? என்ற ஐயம் பலருக்கும் எழுந்தது.