சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் வறட்சி: வன விலங்குகள் பாதிப்பு
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் காணப்படுகின்றன. இதில், ஆசனூா் வனப் பகுதியில் புள்ளிமான்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.
இந்நிலையில், வனப் பகுதியில் கடந்த சில மாதங்களாக மழைப் பொழிவு இல்லாததால் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் புள்ளிமான்கள், யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் தண்ணீரைத் தேடி வனப் பகுதியில் அலைகின்றன.
வறட்சியுடன் வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளதால் வன விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள புள்ளிமான்கள் மர நிழல்களில் படுத்து ஓய்வெடுக்கின்றன.
வன விலங்குகளுக்கான குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்யும் வகையில் வனப் பகுதியில் உள்ள குடிநீா்த் தொட்டிகளில் வனத் துறையினா் தண்ணீரை நிரப்பி வருகின்றனா்.