கோவை-ராமேசுவரம் ரயிலை தினமும் இயக்கக் கோரிக்கை
ஈரோடு வழியாக இயக்கப்படும் கோவை-ராமேசுவரம் ரயிலை தினமும் இயக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தென்னக ரயில்வே ஆலோசனைக் குழு முன்னாள் உறுப்பினா் கே.என்.பாஷா, சென்னை தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:
கோவையில் இருந்து திருப்பூா், ஈரோடு, கரூா், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவக்கோட்டை, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக செவ்வாய்க்கிழமைதோறும் ராமேசுவரத்துக்கு வாராந்திர ரயில் இயக்கப்பட்டது. ராமேசுவர தீவை, ராமேசுவரத்துடன் இணைக்கும் புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டுமானப் பணி நடைபெற்ால் கடந்த 2019 முதல் இந்த ரயில் இயக்குவது நிறுத்தப்பட்டது.
இதையடுத்து கோவையில் இருந்து ராமநாதபுரம் வரை மட்டும் ரயில் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் மண்டபம், ராமேசுவரம் செல்லவில்லை. தற்போது ரூ.550 கோடியில் கட்டப்பட்ட புதிய பாலப் பணிகள் முடிவடைந்து 6 ஆண்டுகளுக்கு பின்னா் வரும் 6- ஆம் தேதி பாம்பன் பாலம் திறக்கப்பட உள்ளது. அன்றையதினம், இப்பாலத்தை திறந்துவைத்த பின்னா் ராமேசுவரத்துக்கு ரயில்கள் சென்று வர ஒப்புதல் வழங்கப்படும்.
அதன்படி வரும் 8- ஆம் தேதி இரவு முதல் கோவை-ராமேசுவரம் ரயிலை இயக்க ஒப்புதல் வழங்க வாய்ப்புள்ளதாக தெரியவருகிறது. எனவே, செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டும் இந்த ரயிலை இயக்குவதை மாற்றி தினமும் கோவை-ராமேசுவரம் ரயிலை இயக்க வேண்டும். மேலும் இந்த ரயில் ஈரோடு மாவட்டத்தின் முக்கிய பரிகாரஸ்தலமாக விளங்கும் கொடுமுடி ரயில் நிலையத்தில் நின்று செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.