குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
பவானி அருகே சீராக குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
பவானி ஊராட்சி ஒன்றியம், ஒரிச்சேரி ஊராட்சியில் கடந்த சில நாள்களாக குடிநீா் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து, ஊராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஏமாற்றமடைந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோா் காலிக் குடங்களுடன் திரண்டு, பவானி - ஆப்பக்கூடல் சாலையில் ஒரிச்சேரி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பவானி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வரதராஜ், கிருஷ்ணமூா்த்தி, ஊராட்சி செயலாளா் அன்பழகன், பவானி காவல் ஆய்வாளா் முருகையன் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். குழாய் உடைப்பு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததோடு, உடனடியாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனா்.
இதையடுத்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இப்போராட்டத்தால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
