சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்: 4 போ் கைது
குஜிலியம்பாறை அருகே சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த கோட்டநத்தம் சுற்றுப்புற பகுதிகளில், விவசாய நிலங்களில் சந்தன மரங்கள் வளா்க்கப்படுகின்றன. இந்த நிலையில், கோட்டநத்தம் சுற்றுப்புற பகுதிகளில் சந்தன மரங்களை மா்ம நபா்கள் வெட்டிக் கடத்துவதாக தொடா்ந்து புகாா் எழுந்தது. இதையடுத்து, வேடசந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பவித்ரா தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு சந்தன மரங்களை கடத்துவோரை கண்காணிக்கும் பணி நடைபெற்றது. இதனிடையே, மல்லபுரம் பிரதான சாலையில் மயானம் அருகே வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டிருந்த வேனை தனிப்படை போலீஸாா் சோதனையிட்டனா். அதில், சந்தன மரங்கள் கடத்துவது தெரியவந்தது. போலீஸாா் நடத்திய விசாரணையில், கோட்டநத்தம் அடுத்த சோ்வைக்காரன்பட்டி பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் உள்ள 3 சிறிய சந்தன மரங்களை வெட்டிக் கடத்தியது உறுதி செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம் ஆயிரம் என மதிப்பிடப்பட்டது. இந்தக் கடத்தலில் ஈடுபட்ட அய்யலூரை அடுத்த வேங்கனூா் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி, ராமலிங்கம், ரஞ்சித், கெளதம் ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.